மும்பை: காட்டுப் பகுதிக்கு மலையேற்றம் சென்ற இடத்தில் சிறுத்தை சத்தம் கேட்டதால் நடிகை மவுனி ராய் தனது உயிருக்கு பயந்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் மற்றும் சின்னத்திரை நடிகையான மவுனி ராய், விடுமுறை நாட்களை கழிப்பதற்காகச் சுற்றுலா சென்றுள்ளார். இயற்கையை ரசிப்பதற்காக அவர் நேற்று அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் மலையேற்றப் பயிற்சிக்கு சென்றார். அருவிகள் மற்றும் மேடு பள்ளங்கள் நிறைந்த பாதையில் நண்பர்களுடன் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென சிறுத்தை ஒன்று உறுமும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘இன்று காட்டிற்குள் மலையேற்றம் சென்றோம். அருவிகளைக் கடந்து மேலே சென்று கொண்டிருந்தபோது சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டது. உடனே அங்கிருந்து எங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினோம்’ என்று அந்த திகில் அனுபவத்தை விவரித்துள்ளார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பாதுகாப்பாகத் திரும்பிய அவர், தனது பயத்தைப் போக்கிக்கொள்ள வீட்டில் சமைக்கப்பட்ட பாரம்பரிய வங்காள உணவுகளை ருசித்துள்ளார். முட்டை குழம்பு, உருளைக்கிழங்கு மசியல் மற்றும் நெய் சோறு ஆகியவற்றைச் சாப்பிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
