×

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

தைபே: தைவானின் வடகிழக்கு பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் தலைநகரில் கட்டிடங்கள் குலுங்கின. தைவான் தீவு ஏற்கனவே நிலநடுக்க அபாயம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு 11.05 மணியளவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், இலாம் கவுண்டிக்கு கிழக்கே 32.3 கி.மீ தொலைவில் 73 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதை 6.6 ரிக்டர் என கணித்தாலும், தைவான் நிர்வாகம் 7.0 ரிக்டர் என உறுதிப்படுத்தியது.

தலைநகர் தைபேவில் ஒரு நிமிடம் வரை கட்டிடங்கள் ஆடியதால் மக்கள் அலறியடித்து ஓடினர். உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான ‘டிஎஸ்எம்சி’ பாதுகாப்பு கருதி ஊழியர்களை வெளியேற்றியது. இலாம் கவுண்டியில் 3,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இந்தியாவிற்கோ அல்லது தைவானுக்கோ ‘சுனாமி’ ஆபத்து இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 6.0 ரிக்டர் வரை பின் அதிர்வுகள் இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தைவான் வரலாற்றில் 1999ம் ஆண்டு 7.3 ரிக்டர் அளவிலும், கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹுவாலியன் பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலும் மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இந்த வரிசையில் தற்போது பதிவாகியுள்ள நிலநடுக்கம் தைவான் வரலாற்றில் 3வது பெரிய நிலநடுக்கமாக கருதப்படுகிறது.

Tags : Taiwan ,TAIPEI ,NORTHEASTERN PART ,Ilam ,
× RELATED வரைவு பட்டியலில் விடுபட்டவர்களை...