டெல்லி: ஜன.15 பொங்கல் விடுமுறை தினத்தில் நடைபெற இருந்த CA தேர்வு 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகம் அறிவித்துள்ளது. பொங்கல் தினத்தில் தேர்வு நடத்துவதற்கு சு.வெங்கடேசன் எம்.பி.உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஒத்திவைப்புக்கான காரணமாக மராட்டிய நகராட்சி தேர்தல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றத்திற்கான காரணம்: மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் ஜனவரி 15, 2026 (வியாழக்கிழமை) அன்று மாநகராட்சி பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு, மாணவர்களின் நலன் கருதி அன்று நடைபெறவிருந்த தேர்வை ஒத்திவைக்க இந்திய பட்டயக் கணக்காளர் கழகம் முடிவெடுத்துள்ளது.
புதிய அட்டவணை விவரம்: ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த இடைநிலைத் தேர்வு (குரூப்-II), தாள்-5: தணிக்கை மற்றும் நெறிமுறைகள் (Auditing and Ethics) பாடம், தற்போது ஜனவரி 19, 2026 (திங்கட்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அதே மையங்களில் தேர்வு நடைபெறும். ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட அனுமதிச் சீட்டுகள், மாற்றியமைக்கப்பட்ட ஜனவரி 19-ம் தேதி தேர்விற்கும் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற பாடங்களுக்கான தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை; அவை ஏற்கனவே அறிவித்தபடி நடைபெறும் என்று ICAI தெளிவுபடுத்தியுள்ளது.
