36 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் வாங்க ரூ.180 கோடி தொகுப்பு நிதி ஒதுக்கீடு

கரூர், ஜன. 22: வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் கூட்டுபண்ணையத் திட்டத்தில் உள்ள உற்பத்தியாளர் குழுக்களுக்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட வேளாண் இயந்திர கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் மலர்விழி பார்வையிட்டு இயந்திரங்களின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். பின்னர், உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் விற்பனையாளர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் டிஆர்ஓ ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் டிஆர்ஓ தெரிவித்ததாவது: கூட்டு பண்ணையத் திட்டத்தின் மூலம் 20 சிறு, குறு விவசாயிகளை கொண்டு உழவர் ஆர்வலர் குழுக்களும், 5 உழவர் ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைந்து 100 நபர்களை கொண்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஒருங்கிணைத்து 1000 சிறு, குறு விவசாயிகளை கொண்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனமும் உருவாக்கப்படுகிறது.

100 விவசாயிகளை கொண்ட ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவும் ஒரே பருவத்தில் ஒரே பயிரில் ஒரே ரகத்தை அதிக பரப்பில் சாகுபடி செய்ய வேளாண் இடுபொருட்களை கூட்டாக கொள்முதல் செய்வதன் மூலம் இடுபொருட்களின் விலை குறைவதோடு, போக்குவரத்து செலவினமும் குறைகிறது. உயரிய தொழில் நுட்பங்களை கடைபிடித்து கூட்டாக சாகுபடி செய்து, தரமாள விளைபொருட்களை உற்பத்தி செய்து, மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தவும் வசதியாகிறது. உழவர் ஆர்வலர் குழுக்கள் தரமான பயிர் சாகுபடி இடுபொருட்களை கூட்டாக கொள்முதல் செய்வதன் மூலம் பயிர் சாகுபடி செலவினம் குறைகிறது.

நடப்ப 2020-21ம் நிதியாண்டில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் 36 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை இயந்திங்கள் வாங்குவதற்கு தொகுப்பு நிதியில் இருந்து ஒவ்வொரு குழுவுக்கும் ரூ. 5லட்சம் வீதம் 180 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் 6 மாத செயல்பாடுகளை பொறுத்து இயந்திங்கள் வாங்க தொகுப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்படும். எனவே, விவசாயிகளின் நலன் கருதி அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை அனைவரும் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories:

>