சென்னை: வெள்ளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் போட்டி போட்டு ஒரே ஆண்டில் கிலோவுக்கு ரூ.1.87 லட்சம் உயர்ந்துள்ளது. இதேபோல, தங்கமும் பவுனுக்கு ரூ.47,600 உயர்ந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்த 15ம் தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டி வரலாற்றை திரும்பி பார்க்க வைத்தது. தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் தாறுமாறாக உயர தொடங்கியது. கடந்த 15ம் தேதி மட்டும் பார் வெள்ளி ரூ.2.15 லட்சத்துக்கு விற்பனையானது.
நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,890க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ஒரு லட்சத்து 3120க்கும் விற்பனையானது. வெள்ளியும் கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.254க்கும், கிலோவுக்கு ரூ.9 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது. தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,000க்கும், பவுனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு பவுன் 1,04,000க்கும் விற்றது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.274க்கும், கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் அதிகரித்து, பார் வெள்ளி ரூ.2,74,000க்கும் விற்பனையானது. இந்த அதிர்ச்சியில் இருந்து நகை வாங்குவோர் மீள்வதற்குள் தங்கம், வெள்ளி விலை மாலை மேலும் உயர்ந்தது. நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,100க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,04,800க்கு விற்பனையானது.
இதே போல வெள்ளி விலையும் மேலும் அதிரடியாக உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ஒரு கிராம் ரூ.285க்கும், கிலோவுக்கு ரூ.11 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.85 லட்சத்துக்கும் விற்பனையானது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு 1680 ரூபாயும், வெள்ளி கிலோவுக்கு 31 ஆயிரம் ரூபாயும் உயர்ந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை.
அதனால், தங்கம், வெள்ளி விலையில் இன்று மாற்றம் எதுவும் இருக்காது. நாளை மார்க்கெட் தொடங்கிய பின்னரே விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரிய வரும். நாளுக்கு நாள் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருவதால் இந்த இரு பொருளும் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி விடுமோ என்ற அச்சம் அவர்களிடம் நிலவ தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று மாலை வரை தங்கம் விலை பவுனுக்கு ரூ.47,600 வரை அதிகரித்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் தான் இந்த விலைக்கு உயர்ந்திருக்கிறது என்றால், வெள்ளி விலை என்பதும் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று மாலை வரை வெள்ளி விலை கிலோவுக்கு 1 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி 1ம் தேதி அன்று வெள்ளி விலை கிலோ 98 ஆயிரம் ரூபாய்க்கு தான் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியே விலை உயர்ந்தால் இந்த ஆண்டு தொடக்கத்திற்குள் தங்கம், வெள்ளி விலை என்பது யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்திருப்பதை தான் பார்க்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து நகை வியாபாரிகள் கூறுகையில், \\”வெள்ளி வெறும் ஆபரணம் தயாரிக்க மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக இயந்திரம், செல்போன், மருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. சூரியன் மூலம் மின் சக்தி தயாரிக்கும் சூரிய ஒளி தகடுகளுக்கு வெள்ளி அவசியம். ஒவ்வொரு சோலார் தகடுகளுக்கும் 15-20 கிராம் வரை வெள்ளி தேவைப்படுகிறது. அதிக சூரிய சக்தி உற்பதி செய்யப்படும்போது, அதிக வெள்ளியும் பயன்படுத்தப்படுகிறது.
மின் வாகனங்களில் மின்சாரத்தில் இயங்கும் கார்களில் வெள்ளி இருக்கிறது. ஒவ்வொரு மின்கார கார்களிலும் 25-50 கிராம் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. 5ஜி மற்றும் சிப்களில் மின்சாரத்தைக் கடத்துவதில் சிறந்த உலோகமாக வெள்ளி இருந்து வருகிறது. மருத்துவமனை கருவிகள், மருந்துகள், சிகிச்சை அளிக்கும் கருவிகளில் வெள்ளி இருக்கிறது. பல காலமாக மருத்துவ துறை வெள்ளியை நம்பியிருக்கிறது.
இதுபோன்ற காரணிகளுக்கு வெள்ளியின் தேவை அதிகரித்து வருகிறது. அதுவும் தேவைக்கும், விநியோகத்துக்கும் இடைவெளி வேறு உள்ளது. இதுவே வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளதால் முதலீட்டாளரின் பார்வை வெள்ளியின் பக்கமும் திரும்ப தொடங்கியது. தங்கத்தில் முதலீடு செய்வது போல வெள்ளியிலும் முதலீடு செய்ய தொடங்கியுள்ளது. இதுவும் விலை உயர்வு ஒரு காரணமாக உள்ளது\\” என்றனர்.
* தங்கம் விலை நேற்று மாலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,100க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,04,800க்கு விற்றது.
* வெள்ளி விலை நேற்று மாலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ஒரு கிராம் ரூ.285க்கும், கிலோவுக்கு ரூ.11 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.85 லட்சத்துக்கும் விற்பனையானது.
* ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு 1,680 ரூபாயும், வெள்ளி கிலோவுக்கு 31 ஆயிரம் ரூபாயும் உயர்ந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
