×

ஸ்மார்ட் கார்டு கேட்டு போராட்டம்

வாடிப்பட்டி, ஜன. 22: வாடிப்பட்டியில் ஸ்மார்ட் கார்டு கேட்டு மூதாட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது வாடிப்பட்டி தாலுகாவில் முதியோர் உதவித்தொகை பெறும் முதியோர்களிடமிருந்து குடும்ப அட்டைகள் திரும்பப் பெறப்பட்டு அவர்களுக்கு மாதத்திற்கு 5 கிலோ அரிசி மட்டும் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்காக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்ட நிலையில் ஏனைய பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் முழுமையாக கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்மார்ட் கார்டு இல்லாத முதியோருக்கு அரசு வழங்கிய பொங்கல் பரிசு கிடைக்கவில்லை. இதனால் ஸ்மார்ட் கார்டு மற்றும் 5 கிலோ அரிசியை நிறுத்தாமல் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பாக முதியோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் மற்றும் வருவாய்துறையினர், ஆதார் அட்டை நகலுடன் மீண்டும் மனு கொடுக்குமாறும் ஸ்மார்ட் கார்டு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...