மதுரை ஜி.ஹெச்சில் இடித்து அகற்றிய கட்டிட பொருட்கள் டெண்டரில் முறைகேடு

* பல லட்சம் ரூபாய் இழப்பு

* பழமை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

மதுரை, ஜன.22: மதுரை அரசு மருத்துவமனையில் பழமையான கல் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டதில் கிடைத்த பொருட்களை டெண்டர் விடுவதில் முறைகேடுகள் நடந்தது அம்பலமாகியுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையின் பழமையான கல் கட்டிடங்கள் இடித்து அகற்றி முடிக்கப்பட்டுள்ளன. ஜைகா என்ற ஜப்பான் நிறுவனத்துடன், கூட்டுத்திட்டத்தில் இப்பகுதியில் ரூ.130 கோடிக்கு கட்டிடங்கள், ரூ.170 கோடிக்கு மருத்துவ கருவிகள் ஏற்படுத்தி, ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை கூடங்கள் கட்டப்படுகிறது. சேலத்தை சேர்ந்த நிறுவனமே கட்டுமான ஒப்பந்தத்தை எடுத்துள்ளது.

மருத்துவமனை வளாகத்தின் பின்புறம் உரிய இடம் இருந்தும், முன்புறம் உள்ள பழமையான கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மதுரை அரசு மருத்துமவனையின் டீன் கேட் அருகே, தோல்நோய் பிரிவு, கண் சிகிச்சைக்கான வெளிநோயாளிகள் பிரிவு, இதய நோய் பிரிவான 40வது வார்டு உள்ளிட்ட 5 பகுதிகளின் கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. 1946ல் அதிகாரி ஹோப் ஆதர் கட்டிய இந்த கட்டிடங்கள் வலிமையில் சிறிதும் குன்றாமல் நிமிர்ந்து நின்றன. உடைக்கப்பட்ட  கட்டிடங்களில் கண் வார்டின் மேல் கட்டிடமானது, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் மாவட்ட கலெக்டரின் நிதியிலிருந்து கட்டப்பட்டது.

இந்த புதிய கட்டுமானத்தையும் இடித்துத் தள்ளியுள்ளனர். ஆனால், இந்த கட்டிடங்களை இடித்து எடுப்பதற்கான டெண்டர் இன்று (ஜன.22) நடப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால், முன்னதாகவே இக்கட்டிடங்களில் இடித்து எடுக்கப்பட்ட பல முக்கிய பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டிருக்கிறது. தொன்மை நகரான மதுரையின் பழைய கட்டிடங்கள், நகரத்து வரலாற்று அடையாளப் பெருமை கொண்டதாகும். இக்கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, இதில் பெரும் முறைகேடு நடந்திருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது.

மதுரையின் பழமை மற்றும் மருத்துவத்துறை ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘டெண்டர் விடுவதற்கு முன்னதாகவே கட்டிடங்கள் முழுமையாக இடிக்கப்பட்டு பொருட்களின் பெரும்பகுதியை ஏற்றிச் சென்று விட்டனர்.  இன்று (ஜன.22) டெண்டர் விடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றனர்.

கட்டிடத்தில் இடித்து எடுத்த 4 ஜன்னல்கள், சில கம்பிகளே டீன் ஆபீஸ் அருகே கிடக்கின்றன. கட்டிட மரப்பொருட்கள் பர்மா தேக்கால் ஆனது.  இரும்பு கிரில்கள், லாடர்கள் பல லட்சம் ரூபாய் மதிப்புடையவை. இடித்து எடுத்த உடைகற்கள் அதிக விலையுள்ளவை. மிகக்குறைந்த அளவில் மதிப்பீடு செய்துள்ளனர், இதிலும் மோசடி நடந்துள்ளது’’ என்றனர்.

Related Stories:

>