×

அனைத்து பஸ்களையும் இயக்க அரசு உத்தரவு குமரி அரசு பஸ்கள் மூலம் தினமும் ₹70 லட்சம் வசூல் பொங்கல் சிறப்பு பேருந்தால் ₹30 லட்சம் அதிகம் கிடைத்தது

நாகர்கோவில், ஜன. 22: குமரி மாவட்டத்தில் ராணித்தோட்டம், செட்டிகுளம், விவேகானந்தபுரம், கன்னியாகுமரி, திங்கள்நகர், குளச்சல், மார்த்தாண்டம், திருவட்டார், குழித்துறை என 12 அரசு போக்குவரத்து பணிமனைகள் மூலம் சுமார் 840 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் மூலம் தினமும் ₹83 லட்சம் முதல் ₹90 லட்சம் வரை  வசூல் ஆகி வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டவில்லை. அதன்பிறகு கடந்த இரு மாதத்திற்கு முன்பு 30 சதவீதம் பஸ்கள் முதற்கட்டமாக இயக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.    நாகர்கோவில்-நெல்லை ஒன் டூ ஒன் பஸ்களில் 15 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது 20 பஸ்களும் இயக்கப்படுகிறது. இதுபோல் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் பெரும்பாலான பஸ்கள் ஓட தொடங்கியுள்ளது. ஆனால் கொரோனா கலத்திற்கு முன்பு கிடைத்த வசூல் தற்போது கிடைக்கவில்லை என அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: கொரோனா காலத்திற்கு பிறகு படிப்படியாக பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு அனைத்து பஸ்களையும் இயக்க சொல்லியுள்ளது. அதன்படி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஸ்டே பஸ்கள், இரவு நேரத்தில் நிறுத்தும் இடத்தில் நிறுத்தாமல் பணிமனைக்கு கொண்டு வர சொல்லியுள்ளோம்.
 அனைத்து பஸ்களும் இயக்கினாலும் கட்டண வசூல் குறைவாகவே உள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பு தினமும் அரசு பஸ்கள் மூலம் ₹90 லட்சம் வரை வசூல் ஆகிவந்தது. தற்போது ₹70 லட்சம் வசூல் ஆகி வருகிறது. பொங்கலுக்காக  சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் திங்கள் கிழமை கட்டண வசூலாக நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ₹99 லட்சத்து 88 ஆயிரம் கிடைத்தது. இது சாதாரண நாளை காட்டிலும் ₹30 லட்சம் அதிகம்.  குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 50 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது திருவனந்தபுரத்திற்கு இயக்க அனுமதி இல்லாத காரணத்தால் திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் களியக்காவிளை வரை இயக்கப்பட்டு வருகிறது. இதனால் ₹6 லட்சம் வரை வசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திற்கு பஸ்கள் இயக்க அனுமதி கிடைத்தால், அரசு போக்குவரத்து கழகத்திற்கு  வசூல் அதிகரிக்கும் என்றார்.

Tags : Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...