பரப்பாடி அருகே பரிதாபம் தம்பியுடன் குளிக்கசென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி பலி

நாங்குநேரி, ஜன. 22:  பரப்பாடி அருகே குளத்தில் தம்பியுடன் குளிக்க சென்ற சிறுவன், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.  விருதுநகர் மாவட்டம், கன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). தொழிலாளியான இவர் கோவையில் குடும்பத்துடன் தங்கியிருந்து தனியார் ஆலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பேச்சிசெல்வி (38). தம்பதிக்கு சபரிகணேஷ் (9), அபினேஷ் (7) என இரு மகன்கள்.  இதனிடையே பேச்சிசெல்வியின் பெற்றோர் நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே பரப்பாடி அடுத்த வேப்பங்குளத்தில் வசித்து வரும் நிலையில் கொரோனா விடுமுறையால் தாத்தா வீட்டிற்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்னரே சபரிகணேஷ், அபினேஷ் ஆகிய இருவரும் வசித்து வந்தனர்.  கடந்த வாரம் தொடர்ந்து பெய்த மழையால் அந்த கிராமத்தில் உள்ள பாசன குளத்தில் தண்ணீர் நிரம்பியிருந்த நிலையில் நேற்று பிற்பகல் இருவரும் குளிக்கச் சென்றனர். இதில் அங்குள்ள மடை கட்டுமானத்தின் மேலே அமர்ந்தபடி சபரிகணேஷ், துணிகளுக்கு சோப் போட்டபோது நழுவிய சோப், குளத்து மடைக்குள் விழுந்தது.

இதையடுத்து அதை எடுக்க குளத்தில் குதித்த சபரிகணேஷ், எதிர்பாராதவிதமாக மடையின் நீர்சூழலில் சிக்கியதோடு தண்ணீரில் மூழ்கினான். இதனால் பதறிய அவனது தம்பி அபினேஷ் அழுதபடி கூச்சலிட்டான். இதை கேட்டு அங்குள்ள வயலில் வேலைபார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் விரைந்து வந்து சிறுவனை உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களால் சிறுவனை சடலமாகத்தான் மீட்க முடிந்தது. இதனிடையே விருதுநகரில் சகோதரியின் இல்லவிழாவில் பங்கேற்க வந்திருந்த கார்த்திகேயன், தற்செயலாக வேப்பங்குளம் வந்தபோது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.  புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விஜயநாராயணம் போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>