×

வேலூர் மாவட்டத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா 5 லட்சம் தொகுப்பு நிதி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் தகவல்

வேலூர், ஜன.22: வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு தொகுப்பு நிதியாக ₹5 லட்சம் வழங்கப்படும் என்று ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். வேலூர் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் கூட்டுப்பண்ணையத்திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் பண்ணை இயந்திர விற்பனையாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சண்முக சுந்தரம் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக பண்ணை இயந்திர விற்பனையாளர்கள் சார்பில் அமைக்கப்பட்ட வேளாண் இயந்திரங்களின் கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்து, பார்வையிட்டார். வேளாண்மை இணை இயக்குநர் மகேந்திர பிரதாப் தீட்சித் திட்ட விளக்க உரையாற்றினார்.

முன்னதாக கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது: இந்த திட்டத்தில் முதற்கட்டமாக ஒரு கிராமத்தில் தொடர்ச்சியாக நிலம் கொண்ட ஒரே பயிரினை சாகுபடி செய்யும் 20 சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரு விவசாய ஆர்வலர் குழு அமைக்கப்பட வேண்டும். 2ம் கட்டமாக வட்டார அளவில் ஒரே பயிர் வகைகளை சாகுபடி செய்யும், கிராமங்களிலோ அல்லது அண்மைக் கிராமங்களிலோ உள்ள 5 ஆர்வலர் குழுக்களை இணைத்து 100 பேர் கொண்ட ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுவினை ஏற்படுத்திட வேண்டும். அடுத்தநிலையாக ஒவ்வொரு 10 உழவர் உற்பத்தி குழுக்களை ஒருங்கிணைத்து ஆயிரம் சிறு, குறு விவசாயிகளை கொண்ட ஒரு உழவர் உற்பத்தி நிறுவனத்தை ஏற்படுத்தி, உற்பத்தி நிறுவனர்களாக முன்னேற வாய்ப்பளிக்கப்படுகிறது. 2020-21ம் ஆண்டு வேளாண்மை துறையின் மூலம் 22 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கும் தொகுப்பு நிதியாக ₹5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பண்ணை இயந்திர விற்பனையாளர்கள் சார்பில் அமைக்கப்பட்ட வேளாண் இயந்திரங்களின் கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்து, பார்வையிட்டார்.

Tags : farmer producer groups ,Vellore district ,
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...