×

சேமிப்பு கணக்கு தொடங்கிய போது வங்கியில் கள்ள நோட்டுகளை செலுத்திய பெண்ணுக்கு வலை

புழல்:  செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி மணவாளன் (40, பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவர் அப்பகுதியில் பருப்பு வியாபாரம் செய்து வருகிறார்.  இவர் செங்குன்றம் பைபாஸ் சாலையில் பிரபல தனியார் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் இங்கு வந்த செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி (40), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கினார். அப்போது அவர், ₹1 லட்சத்து 29 ஆயிரத்தை வங்கியில் செலுத்திவிட்டு சென்றார்.   நேற்று முன்தினம் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தை, வங்கி லாக்கரில் வைக்க ஊழியர்கள் எண்ணி சரிபார்த்தனர். அதில், நூற்று முப்பத்து நான்கு 200 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுக்கள் எனத் தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ₹26,800. இந்த கள்ள நோட்டுகளை செலுத்திய நபர் குறித்து விசாரித்தபோது, சேமிப்பு கணக்கு தொடங்கிய விஜயலட்சுமி என தெரியவந்தது.  

இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் வங்கி மேலாளர் யுவராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து, கள்ளநோட்டுகளை செலுத்திய அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.  பொதுவாக, வங்கியில் பொதுமக்கள் பணம் செலுத்தும்போது, ஊழியர்கள் அவற்றை மெஷினில் வைத்து, கள்ள நோட்டா என சரிபார்ப்பார்கள். அப்போது, கள்ள நோட்டு மற்றும் செல்லாத நோட்டுகளை மெஷின் காட்டிக்கொடுத்துவிடும். அவற்றை வங்கி ஊழியர்கள் பெற மாட்டார்கள். ஆனால், இவ்வளவு பெரிய தொகையை மெஷினில் வைத்து சரிபார்க்காமல் ஊழியர் வாங்கியது ஏன், வங்கி ஊழியரின் தொடர்புடன் இச்சம்பவம் நடந்துள்ளதா என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : bank ,
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு