வாகனம் ஓட்டும் கலையை பயின்றால் பெண்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை: கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இருசக்கர வாகன அணிவகுப்பு நடந்தது. இதனை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார்,கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், கலெக்டர் கூறியதாவது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக பெண்கள் இருசக்கர வாகன அணிவகுப்பு நடக்கிறது. இதில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கி மூங்கில் மண்டபம், காந்தி சாலை, ரங்கசாமி குளம் மற்றும் கீரைமண்டபம் வழியாக மீண்டும் கலெக்டர் அலுவலக வளாக மைதானத்தில் முடிவடைகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் ஹெல்மட் கட்டாயம் அணிய வேண்டும். வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு விதிகளை மதித்து நடக்க வேண்டும். வாகனம் ஓட்டும் கலையை பெண்கள் பயின்றால்,  அவர்களது பணிகளுக்கு வேறு யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

பெண்கள், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, நீளமாக பறக்கும் வகையில் ஆடைகள் அணிந்தால் அது சக்கரத்தில் சிக்கி விபத்து ஏற்படுத்தும். வாகனத்தில் அதிவேகமாக செல்லக்கூடாது. வழுக்கக்கூடிய சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டும்போது, கவனமாகவும் மெதுவாகவும் செல்ல வேண்டும். அணிவகுப்பு மூலமாக சாலை பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்றார். இதில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் (காஞ்சிபுரம்) தினகரன், (பெரும்புதூர்) சசி, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>