×

வெள்ளிக்கட்டி கிலோ ரூ.2.44லட்சமாக உயர்வு: வெள்ளிப்பொருட்களின் உற்பத்தி 50 சதவீதம் சரிவு; பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு வருவாய் பாதிப்பு

சேலம்: வெள்ளிக்கட்டி கிலோ ரூ.2 லட்சத்து 44 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளிப்பொருட்களின் உற்பத்தி 50 சதவீதம் சரிந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். சேலத்தில் செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, நெத்திமேடு, பள்ளப்பட்டி, சிவதாபுரம், பனங்காடு உள்பட பல்வேறு பகுதிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளிப்பட்டறைகள் உள்ளன. இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கின்றனர். இங்கு வெள்ளி கால்கொலுசு, அரைஞாண் கொடி, சந்தனகிண்ணம், குங்கும சிமிழ், டம்ளர், வெள்ளிதட்டு உள்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப்பொருட்கள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், வட மாநிலங்களுக்கும் அதிகளவில் செல்கிறது. கடந்த தீபாவளி பண்டிகைக்கு முன்பு, வரலாறு காணாத அளவில் ஒரு கிலோ ெவள்ளி ரூ.2 லட்சத்து 7 ஆயிரமாக அதிகரித்தது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு வெள்ளிக்கட்டி படிப்படியாக குறைந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக மீண்டும் வெள்ளி கட்டியின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. விலை உயர்வு காரணமாக, வெள்ளிக்கட்டியை வாங்கி உற்பத்தி செய்ய வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக பட்டறைகளில் வெள்ளிப்பொருட்களின் உற்பத்தி குறைந்துள்ளது. பல தொழிலாளர்கள் போதிய வேலை இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சேலம் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.85 ஆயிரத்திற்கு விற்றது.

கடந்த அக்.16ம் தேதி ரூ.2,07,000 என்று விலை அதிகரித்தது. விலை உயர்வு காரணமாக, கடந்த தீபாவளி பண்டிகையில் சீசன் ஆர்டர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சேலத்தில் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு, வருவாய் இழந்தனர். தீபாவளி பண்டிகைக்கு பிறகு, வெள்ளிப்பொருட்கள் கேட்டு வரும் ஆர்டர் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தோம். அதற்கு நேர்மாறாக வெள்ளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. கடந்த ஒரு வாரமாக வெள்ளியின் விலை ஜெட் வேகத்தில் ஏறிக்கொண்டே செல்கிறது. கடந்த 23ம் தேதி ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்திற்கு விற்றது. 24ம் தேதி ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் அதிகரித்து, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்திற்கு விற்றது. 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 24 நாட்களே இருக்கிறது.

பொங்கலுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து வெள்ளிப்பொருட்கள் கேட்டு ஆர்டர் வரும் என்று எதிர்பார்த்தோம். விலை உயர்வு காரணமாக வரவேண்டிய ஆர்டரும் வரவில்லை. இந்த விலை காரணமாக வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி 50 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பட்டறைகள் செயல்படுகிறது. விலை உயர்வு காரணமாக, ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட வெள்ளிப்பொருட்கள் விற்பனை இல்லாமல் தேக்கமடைந்துள்ளன. இதனால் உற்பத்தியாளர்கள், வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு உற்பத்தியாளர்கள் கூறினர்.

கடந்த 7 மாதத்தில் வெள்ளி கடந்த வந்த பாதை
மாதம் விலை
ஜூன் 1ம் தேதி ரூ.1.10 லட்சம்
ஜூன் 19ம் தேதி ரூ.1.22 லட்சம்
ஜூன் 30ம் தேதி ரூ.1.17 லட்சம்
ஜூலை1ம் தேதி ரூ.1.20 லட்சம்
ஜூலை 9ம் தேதி ரூ.1.10 லட்சம்
ஜூலை 23ம் தேதி ரூ.1.29 லட்சம்
ஜூலை 31ம் தேதி ரூ.1.25 லட்சம்
ஆகஸ்ட் 1ம் தேதி ரூ.1.23 லட்சம்
ஆகஸ்ட் 30ம் தேதி ரூ.1.35 லட்சம்
ஆகஸ்ட் 31ம்தேதி ரூ.1.35 லட்சம்
செப்.1ம் தேதி ரூ.1.36 லட்சம்
செப்.30ம் தேதி ரூ.1.61 லட்சம்
அக்.1ம் தேதி ரூ.1.61 லட்சம்
அக்.15ம் தேதி ரூ.2.07 லட்சம்
அக்.31ம் தேதி ரூ.1.65 லட்சம்
நவ.1ம் தேதி ரூ.1.66 லட்சம்
நவ.5ம் தேதி ரூ.1.63 லட்சம்
நவ.30ம் தேதி ரூ.1.92 லட்சம்
டிச.1ம் தேதி ரூ.1.96 லட்சம்
டிச.15ம் தேதி ரூ.2.15 லட்சம்
16ம் தேதி ரூ.2.11 லட்சம்
17ம் தேதி ரூ.2.22 லட்சம்
18ம் தேதி ரூ.2.24 லட்சம்
19ம் தேதி ரூ.2.21 லட்சம்
20ம் தேதி ரூ.2.26 லட்சம்
21ம் தேதி ரூ.2.26 லட்சம்
22ம் தேதி ரூ.2.31 லட்சம்
23ம் தேதி ரூ.2.34 லட்சம்
24ம்தேதி ரூ.2.44 லட்சம்

Tags : Salem ,Sevvaipettai ,Annathanapatti ,Nethimedu ,Pallapatti ,Sivathapuram ,Panangadu.… ,
× RELATED தங்கம் விலை புதிய உச்சம் ஒரு பவுன் ரூ.1,02,560