×

விண்வெளி வீரர்களுக்கு பல் ஆரோக்கியம் மிக முக்கியம் விண்வெளிக்கு செல்லும் முன் எனது 2 பற்களை அகற்றினர்: சுபான்ஷூ சுக்லா தகவல்

மும்பை: விண்வெளி வீரர்களுக்கு பல் ஆரோக்கியம் முக்கியம், விண்வெளி பயணத்திற்கு முன் எனது 2 கடவாய் பற்கள் அகற்றப்பட்டது என விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா தெரிவித்தார்.
ஆக்சியம் மிஷன்-4 மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தவர் குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா. இவர் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக விண்வெளிப் பயணத்திற்கான பயிற்சி பெற்று வருகிறார். நாட்டின் முதல் மனித விண்வெளி பயணமான ககன்யான் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் ஆகியோருடன் மும்பை ஐஐடியில் விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: விண்வெளிக்கு செல்லும் போது பல் ஆரோக்கியம் மிக முக்கியமானது. விண்வெளிக்கு செல்ல பயிற்சி பெறும் போது, என்னுடைய கடவாய் பற்கள் அகற்றப்பட்டன. எந்தவொரு அவசரநிலையையும் அல்லது சூழ்நிலையையும் கவனித்துக் கொள்ள மருத்துவ ரீதியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏனெனில் தயாராக உதவி கிடைக்காது. நீங்கள் செய்ய முடியாத ஒன்று பல் அறுவை சிகிச்சை. எனவே நீங்கள் புறப்படுவதற்கு முன்பு உங்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது என்பதை அவர்கள் உறுதி செய்கிறார்கள். எனது இரண்டு கடவாய் பற்களை பிடுங்கிவிட்டேன். பிரசாந்த் நாயரின் மூன்று பற்கள் பிடுங்கப்பட்டது. பிரதாப்பின் நான்கு பற்கள் பிடுங்கப்பட்டுவிட்டது.இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Subhanshu Shukla ,Mumbai ,International Space Station ,Axiom Mission- ,
× RELATED ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க திட்டம்