திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்கம் கல்லூரி சார்பில் வரவேற்பு

திருவண்ணாமலை, ஜன.21: திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கியது. அதையொட்டி, கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளிலும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் 20ம் தேதி முதல் தொடங்கும் என மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்திருந்தார்.

அதன்படி, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கியது. இக்கல்லூரியில் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட 100 மாணவர்களில் 85 மாணவர்கள் முதல் நாளன்று பெற்றோருடன் வந்திருந்தனர். இந்நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடந்தது. மாணவர்களை வரவேற்று, கல்லூரி டீன் திருமால் பாபு பேசினார்.

நிகழ்ச்சியில், துணை முதல்வர் சுரேஷ், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஏ.ஷகில், துணை கண்காணிப்பாளர் எஸ்.தரன், ஆர்எம்ஓ அரவிந்தன் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம், மருத்துவ கல்லூரியில் சேர்க்கை பெற்ற 6 மாணவர்களுக்கு, கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பூங்கொத்து அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தற்போது அறிமுக வகுப்புகள் மட்டும் நடைபெறும் எனவும், அடுத்த மாதம் 2ம் தேதி முதல் முறையான வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

>