சென்னை நர்ஸ் தற்கொலை முயற்சி வாலிபருக்கு போலீஸ் வலை காதலிக்க வற்புறுத்தி கொலை மிரட்டல்

போளூர், ஜன.21: போளூர் அருகே காதலிக்க வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததால் வேதனையடைந்த சென்னை நர்ஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவரை ஆரணி அடுத்த தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன்(25) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

மேலும் தனது காதலை ஏற்று கொள்ளும்படி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவரது காதலை நர்ஸ் ஏற்கவில்லை. இதனால், நர்சின் போட்டோவை தனது போட்டோவுடன் இணைத்து, கிராபிக்ஸ் செய்து சமூக வளைதளங்களில் பதிவிட போவதாக கோதண்டராமன் மிரட்டி வந்தாராம். இந்நிலையில், பொங்கல் விடுமுறை காரணமாக சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு நர்ஸ் வந்தார். இதையறிந்த கோதண்டராமன் குடிபோதையில் அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது, தன்னை காதலிக்கும்படி கூறி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதனால் மனமுடைந்த நர்ஸ் தனது வீட்டில் இருந்த பெனாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை உடனடியாக மீட்டு சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தற்கொலைக்கு முயன்ற நர்சின் தாயார், போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள கோதண்டராமனை தேடி வருகிறார். நர்ஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>