×

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

 

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாணுமாலயன் சுவாமி கோயில் மார்கழி பெருந்திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு மார்கழி பெருந்திருவிழாவிற்காக நேற்று மாலை மரபுபடி கோட்டார் பட்டாரியார் சமுதாயத்தில் இருந்து கொடிபட்டம் கோட்டார் விநாயகர் கோயில் முன்பு வைத்து அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ரத வீதியை சுற்றி வந்து கோயில் நிர்வாகிகளிடம் கொடிபட்டத்தை கொடுத்தனர். இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு மாணிக்கவாசகர் பூஜை நடைபெற்றது. காலை 8 மணியளவில் கொடி மரத்திற்கு பூஜைகள் செய்து கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. கொடிமர பூஜைகளை வட்டப்பள்ளிமடம் சிவ பிரசாத் செய்தார்.

இதையடுத்து காலை 8.20 மணிக்கு தெற்கு மண்மடம் நித்தியயோக ஸ்தானிகர் திலீப் நம்பூதிரி கொடியேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில் விஜய் வசந்த் எம்பி., தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, மதிமுக ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி, அதிமுக பொறுப்பாளர் ஆறுமுகம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து காலை 10 மணிக்கு திருவெம்பாவை பாராயணம், 10.30 மணிக்கு திருமுறை பெட்டக ஊர்வலம் நடைபெற்றது. இரண்டாம் திருவிழாவான நாளை காலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5.30மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மூன்றாம் திருவிழா அன்று காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், காலை 8.30 மணிக்கு திருவெம்பாவை இசையும், காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8.30 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு பக்தி மெல்லிசை, இரவு 10 மணிக்கு கர்ப்பக விருட்சக வாகனத்தில் சுவாமி திருவிதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் இரவு 10.30 மணிக்கு தனது தாய் தந்தையர்களுக்கு நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கோட்டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்ரமணியசுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகிய சுவாமிகள், சுவாமி அம்பாள் கிழக்கு திசை நோக்கி நிற்க மூன்று முறை வலம் வரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. நான்காம் திருவிழா அன்று காலை 8 மணிக்கு பூத வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 10.30 மணிக்கு பரங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

5-ம் திருவிழா அன்று காலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமியும், கருட வாகனத்தில் பெருமாளும், அன்ன வாகனத்தில் அம்பாளும் திருவீதிஉலா வரும் பஞ்சமூர்த்தி தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு தாணுமாலய சுவாமி கோயில் தெற்கு பாகத்தில் உள்ள வீர மார்த்தாண்ட விநாயகர் கோயில் முன்பு சுவாமி அம்பாள் பெருமாள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிழக்கு திசை நோக்கி நிற்க கருடன் சுவாமியையும் கோயில் கோபுரத்தையும் மூன்று முறை வலம் வரும் கருட தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமிக்கு அஷ்டாபிஷேகமும், இரவு 10.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஆறாம் திருவிழா அன்று காலை 9 மணிக்கு பூங்கோயில் வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் ஏழாம் திருவிழா அன்று காலை 5 மணிக்கு சுவாமி பெருமாள்அம்பாள் பல்லக்குவாகனத்தில் வீதிஉலாவரும் நிகழ்ச்சியும் மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும், இரவு 10.30மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது எட்டாம் திருவிழா அன்று காலை 5 மணிக்கு சிதம்பரேசுவர்திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஒன்பதாம் திருவிழாவில் காலை 4 மணிக்கு கங்காளநாதர் பிட்சாடனராக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், காலை 9.15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேரில் விநாயகரும், அம்மன் தேரில் அம்மனும், சுவாமி தேரில் சுவாமியும் அமரச் செய்து தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பத்தாம் திருவிழா அன்று காலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், இரவு 9:30 மணிக்கு திருஆராட்டும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, கோவில் கண்காணிப்பாளர் ஆனந்த், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் தாணுமாலய சுவாமி கோயில் பக்தர்கள், பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

Tags : Marghazi Festival ,Susindram Tanumalayan Swami Temple ,Sami Darisana ,Susindram ,Tanumalayan Swami Temple ,Kumari District, Susindra ,
× RELATED பாண்டிய நாட்டை வலம் வரும் ஆதியோகி ரத...