வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் 12.64 லட்சம் பேர்: ஆண்களை விட பெண்களே அதிகம்

வேலூர், ஜன.21: வேலூர் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 12.64 லட்சம் வாக்காளர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இதற்கிடையே கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி மாநிலம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் 15ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 18 வயது நிரம்பிய ஏராளமான இளைஞர் மற்றும் இளம்பெண்கள் ஆர்வமுடன் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்திருந்தனர்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாம்களில் ஏராளமானோர் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த விண்ணப்பித்திருந்தனர். சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர் சேர்க்க 38,854 பேரும், பெயர் நீக்க 9,176 பேரும், பெயர் திருத்த 5,426 பேரும், முகவரி மாற்ற 3,398 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்டார். இதனை அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பெற்றுக்கொண்டனர். அந்த பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 12 ஆயிரத்து 857 பேரும், பெண்கள் 6 லட்சத்து 51 ஆயிரத்து 91 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 140 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 64 ஆயிரத்து 88 பேர் உள்ளனர். பட்டியலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் கடந்த 2011 மக்கள் தொகை அடிப்படையில் 18, 19 வயதுடைய 46,264 பேர் வாக்களிக்க கூடியவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் 23,800 பேர் மட்டுமே விண்ணப்பித்து தற்போது வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மீதமுள்ள 22 ஆயிரத்து 400 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவில்லை. இந்த புதிய வாக்காளர்களையும் இணைக்க அரசியல் கட்சியினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாளை (இன்று) முதல் தொடர் சுருக்க திருத்த முறை அமல்படுத்தப்படுவதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது. எனவே www.nvsp.in என்ற இணையதளத்தில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்’ என்றார்.

அப்போது டிஆர்ஓ பார்த்தீபன், ஆர்டிஓ கணேஷ், தாசில்தார்கள் ராம், முரளி, ரமேஷ், பாலமுருகன், சரவணமுத்து ஆகியோர் உடனிருந்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகை கணக்கின்படி தற்போது 72 சதவீதம் பேர் வாக்காளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ்...

வேலூர் மாவட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக விவரம் :

தொகுதி - ஆண்கள் - பெண்கள் - 3ம் பாலினம் - மொத்தம்

காட்பாடி- 1,19,583 - 1,27,813 - 32 - 2,47,428

வேலூர் - 1,21,101 - 1,30,243 - 26 - 2,51,370

அணைக்கட்டு - 1,22,995 - 1,30,344 - 37 - 2,53,376

கேவி.குப்பம் - 1,09,836 - 1,14,389 - 05 - 2,24,230

குடியாத்தம் - 1,39,342 - 1,48,302- 40- 2,87,684

மொத்தம் - 6,12,857 - 6,51,091 - 140 - 12,64,088

Related Stories:

>