×

பெண்ணின் காதல் திருமணத்தால் முன்விரோதம்: வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; 35 பவுன் நகை, ரூ.2 லட்சம் நாசம்

 

திருமங்கலம்: மதுரை அருகே காதல் திருமணத்தால் ஏற்பட்ட முன்விரோதத்தில் மணமகனின் சகோதரி வீட்டில் மணமகள் தரப்பினர் பெட்ரோல் குண்டு வீசியதில் 35 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகி சேதமடைந்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம், முகமதுஷாபுரத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் அஸ்வந்த்(25). திருமங்கலம் பழனியாபுரத்தை சேர்ந்தவர் கவிராஜன் மகள் அனிதா (23). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இந்த திருமணத்தை பெண் வீட்டார் ஏற்கவில்லை. இதனால், இரு தரப்புக்கம் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், செல்வத்தின் மூத்த மகள் பிரியதர்ஷினியின் மாமியார் உடல்நல குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரை செல்வம், அஸ்வந்த் மற்றும் குடும்பத்தினர் பார்த்துவிட்டு நேற்று இரவு திரும்பி வந்துகொண்டிருந்தனர். திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே வந்தபோது அஸ்வந்தை கவிராஜன் வழிமறித்து தகராறு செய்தார். மேலும், கல்லால் தாக்கினார். இதில், செல்வம், அவரது பேத்திக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, செல்வம் தனது பேத்தியுடன் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். திருமங்கலம் எட்டுபட்டறை மாரியம்மன் கோவில் அருகே அஸ்வந்தின் சகோதரி பிரியதர்ஷினி வீடு உள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் இந்த வீட்டிற்குள் மர்மநபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பினார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிக்கப்பட்டது. இருப்பினும், வீட்டில் இருந்த கட்டில், பீரோ எரிந்து சேதமடைந்தது.

இதில் பிரியதர்ஷினியின் மாமியார் மருத்துவ செலவிற்கு வைத்திருந்த ரூ.2 லட்சம் பணம் மற்றும் சுமார் 35 பவுன் தங்க நகைகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து பிரியதர்ஷனியின் கணவர் பாலமுருகன் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதில், பெட்ரோல் குண்டு வீசியதற்கு கவிராஜன் தரப்புதான் காரணம் என தெரிவித்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : Nassam ,Madurai ,Madurai District Thirumangalam ,Mohammadushapura ,
× RELATED ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி...