×

பென்னாகரம் பேருந்து நிலையம் திடீர் இடமாற்றம்

தர்மபுரி, ஜன.21: பென்னாகரம் பேருந்துநிலையம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால் பயணிகள், விவசாயிகள், பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 8 ஏக்கரில் ₹4.50 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட உள்ளது.
பென்னாகரம் பேருந்துநிலையம், பேரூராட்சியின் மையப்பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து, கிராம மக்கள் ஆயிரகணக்கானோர் வந்து செல்கின்றனர். ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு செல்வோர், பென்னாகரம் பேருந்து நிலையம் வழியாக தான் செல்ல வேண்டும். இந்த பேருந்து நிலையம், கடந்த 25ஆண்டுக்கு முன் கட்டப்பட்டதால், அங்குள்ள வணிக வளாக கட்டடங்கள், பேருந்து நிலைய தரைத்தளம் பகுதிகள் சிதலமடைந்தன. இதனால், புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், ₹4.50 கோடியில் புதிய பேருந்து நிலையம்  அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது கடைகளை காலி செய்துவிட்டு, புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சில வியாபாரிகள் கடைகளை காலி செய்தனர். சில கடைகள் பொங்கல் பண்டிகைக்காக, பேருந்துநிலையத்தில் வியாபாரம் செய்துவந்தனர். இந்த கடைகளையும் காலி செய்யும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், நிழற்கூடம் ஆகிய பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம், பென்னாகரம் பேருந்து நிலையத்தை வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே தற்காலிக பேருந்து நிலையமாக மாற்றி அமைத்தனர். பின்னர் பொக்லைன் மூலம் பேருந்து நிலையத்தில் இருந்த கடைகள் இடித்து அகற்றப்பட்டது. திடீரென பேருந்து நிலையத்தை மாற்றியதால், பயணிகள் எங்கு சென்று பேருந்து ஏறுவது என தெரியாமல் தவித்தனர். நேற்று முன்தினம், பள்ளிகள் திறக்கப்பட்டதால் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக பல மாதங்களாக கூறி வருகிறோம். புதிய பேருந்து நிலைய கட்டுமானத்தை விரைவுபடுத்த, உடனடியாக இடமாற்றம் செய்து, தற்காலிக பஸ் ஸ்டாண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்,’ என்றனர்.

Tags : relocation ,Pennagaram ,bus stand ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை