தர்மபுரியில் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தினர் காதலியை பிரிக்க முயற்சித்ததால் காதலன் தூக்கிட்டு தற்கொலை

தர்மபுரி, ஜன.21:தர்மபுரி மாவட்டம் கடகத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் ஜீவா (25). இவர், பழைய தர்மபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணினி டேட்டா ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த சமீரா (24) என்பவர் வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து வந்தனர். பின்னர், திருமணம் செய்து கொள்ளாமலேயே, குமாரசாமிப்பேட்டை அருகே தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இதுகுறித்து , ஜீவாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து, தர்மபுரி டவுன் போலீசில் தனது மகனை மீட்டுத் தருமாறு புகார் அளித்தனர்.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி ஜீவா வீட்டில் சடலமாக தொங்குவதாக அப்பகுதியினர், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் விரைந்து வந்த பெற்றோர், இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.இதுகுறித்து, தர்மபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சமீராவும், ஜீவாவும் திருமணம் செய்துகொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்தனர். விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். இதை அறிந்த ஜீவாவின் பெற்றோர், சமீராவைவிட்டு பிரிந்து வரும்படி வற்புறுத்தியுள்ளனர். இதனால் ஜீவா மன உளைச்சலில் இருந்துள்ளார்.சம்பவத்தினத்தன்று சமீரா கடைக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் ஜீவா உள்பகுதியில் வீட்டை பூட்டிவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்தது.

3பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில், நேற்று ஒருநாளில் 3பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 6,543 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,456பேர் குணமாகி வீட்டிற்கு திரும்பி சென்றனர். நேற்று ஒரேநாளில் 7பேர் குணமாகி வீட்டிற்கு சென்றனர். மொத்தம் 33பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 54பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

Related Stories:

>