கோயில்களுக்கு இலவச மின்சாரம்

தர்மபுரி, ஜன.21: தர்மபுரி பாரத மாதா ஆன்மீக சேவை மைய பொதுச்செயலாளர் தகடூர் வேணுகோபால், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், வருமானம் இல்லாத கிராம கோயில்களுக்கு, இலவச மின்சாரம் வழங்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் விரும்பும் கடவுள்களுக்கு அவர்களின் கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் கட்டித்தர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோயில்களில் ஏழை, எளிய மக்கள் இலவசமாக தங்கி செல்ல மண்டபங்கள் கட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கிணற்றில் விழுந்து தொழிலாளி சாவு

இண்டூர் பி.எஸ்.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சிவன்(38). கூலி தொழிலாளி. இவருக்கு போதா என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 18ம் தேதி போதையில் வீட்டிற்கு வந்த சிவன், மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பணம் தரவில்லை என்றால் கிணற்றில் குதித்து விடுவதாக மிரட்டி உள்ளார். ஆனால் போதா  பணம் தர மறுத்ததால், வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சிவன் குதித்துள்ளார். நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

இளம்பெண் கடத்தல்

மாரண்டஅள்ளியை சேர்ந்தவர் கோவிந்தன் மகள் கோமதி(22, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). பி.பார்ம் படித்துள்ள இவர், கடந்த 18ம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, அவரது பெற்றோர் மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தனர். அதில், தங்கள் மகளை இன்ஜினியரிங் மாணவர் குமரவேல்(22) கடத்தி சென்றதாகவும், அவரை மீட்டு தர வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதன் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

பழுதடைந்த தார்சாலை

கடத்தூர் ஒன்றியம், கர்தானூர் - மேம்பாலம் வழியாக சிந்தல்பாடி -அரூர் பிரதான சாலை வழியாக, தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது. இந்நிலையில் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, பழுதடைந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

₹23 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், நேற்று நடந்த சந்தையில் மாடு ₹23500 முதல் ₹47000 வரையும், ஆடு ₹4200 முதல் ₹8500 வரையும் விற்பனையானது. நாட்டுக்கோழி ஒரு கிலோ உயிருடன் ₹340 வரை விற்பனை செய்யப்பட்டது. இதில் தொத்தம் ₹23 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

காளை முட்டி தொழிலாளி பலி

காரிமங்கலம் ராமசாமி கோயில் சார்பில், கடந்த 17ம்தேதி எருதுவிடும் விழா நடந்தது. விழாவை காண காரிமங்கலம் முக்கோணபார்க் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னத்தம்பி(42) சென்றார். அப்போது மாடு முட்டி அவரை தூக்கி வீசியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

தர்மபுரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மாதம் நேற்று முன்தினம் முதல் கடைபிடிக்கப்படுகிறது. தர்மபுரி 4 ரோடு ரவுண்டனா அருகே நேற்று முன்தினம் போலீஸ் டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில், பொதுமக்கள் மத்தியில் விபத்து குறித்த விழிப்புணர்வு முகம் நடந்தது. தர்மபுரி நகர போக்குவரத்து போலீஸ் எஸ்ஐ சின்னசாமி மற்றும் போலீசார், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>