நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து

திருச்சி, ஜன.21: திருப்பூரை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மனைவி பத்மாவதி (73). மகள் சாந்தி. சாந்திக்கு திருமணமாகி திருச்சி வயலூர் ரோடு குமரன்நகர் அவ்வையார் தெருவில் கணவருடன் வசித்து வருகிறார். பொங்கல் பண்டிகைக்கு பத்மாவதி, திருச்சியில் உள்ள மகள் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். நேற்றுமுன்தினம் இரவு சாந்தி, அவரது கணவர் ஆகியோர் ஒரு அறையிலும், பத்மாவதி தனது பேரனுடன் மற்றொரு அறையிலும் தூங்கினர். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பத்மாவதி கண்விழித்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அறையில் பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தது. அப்போது பத்மாவதி தனது கழுத்தை பார்த்தபோது அணிந்திருந்த 4 பவுன் செயினும் கொள்ளை போனது தெரியவந்தது. மர்ம நபர்கள் நள்ளிரவு பின்பக்க கதவை உடைத்து புகுந்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பத்மாவதியிடம் செயினை நைசாக கழற்றியதுடன், பீரோவையும் சத்தம் கேட்காமல் உடைத்து உள்ளே தேடிப்பார்த்ததில் எதுவும் சிக்கவில்லை. பின்னர் கொள்ளையர்கள் வந்தவழியாகவே தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து பத்மாவதி குடும்பத்தினர் உடனே 100க்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை அரசு மருத்துவமனை போலீசார் சம்பவஇடம் சென்று விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். திருச்சியில் சமீப காலமாக வீடுகளில் புகுந்து கொள்ளை சம்பவம், இரவு, பகல் நேரங்களில் தனியாக நடந்தும், வாகனங்களில் செல்லும் பெண்களை தாக்கி செயின் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 18ம் தேதி நள்ளிரவு ரங்கம் மேலூர் ரோட்டில் ஒரு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து புகுந்த 2 கொள்ளையர்கள் ஆடிட்டர் மனைவியை கட்டையால் தாக்கி 15 பவுன் நகைகளை பறித்து சென்றுவிட்டனர். நள்ளிரவு பின்புற கதவை உடைத்து வீடுகளில் புகுந்து கொள்ளைய சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>