×

பட்டுக்கோட்டையில் அழுகிய சம்பா பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்

பட்டுக்கோட்டை, ஜன.21: சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவில் சாகுபடி செய்திருந்த பல ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி அழுகி சேதமானது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பட்டுக்கோட்டையில் ஆர்டிஓ அலுவலகம் முன் நேற்று அழுகிய சம்பா பயிர்களை கைகளில் ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணை தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய செயலாளர் கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் செல்வம், விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர் ராமசாமி, ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் மோரிஸ் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் பாதிப்படைந்த ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். நிலக்கடலை, உளுந்து பயிர் செய்த விவசாயிகளுக்கு கணக்கு எடுத்து தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். தொடர் மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கும், உயிரிழந்தவர்களுக்கும், ஆடு, மாடுகளையும் கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முடிவில் சார்-ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அருளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருக்காட்டுப்பள்ளி: மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் திருக்காட்டுப்பள்ளி சாலையில் தாலுகா அலுவலக பிரிவு சாலையிலிருந்து பூதலூர் விவசாய சங்க ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர் (தெற்கு), முருகேசன் (வடக்கு) தலைமையில் விவசாயிகள் பேரணியாக வந்தனர். பாலசுப்பிரமணியன், உதயகுமார், ராஜகோபால், சம்சுதீன், மருதமுத்து, விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மனுவை பூதலூர் தாலுகா துணை தாசில்தாரிடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பதாக துணை தாசில்தார் கூறினார். பேராவூரணி: பேராவூரணி தாசில்தார் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றியச் செயலாளர் குமாரசாமி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையா கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள் பூவாளூர் மாணிக்கம், ராமலிங்கம், ரெங்கசாமி, பேராசிரியர் கரம்சந்த் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Pattukottai ,
× RELATED பட்டுக்கோட்டையில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி