×

அறந்தாங்கி அருகே பரபரப்பு தூக்கிட்டு இறந்த பெண் சடலத்தை பெற்றோரிடம் காட்டாமல் எரிப்பு

அறந்தாங்கி, ஜன.21: அறந்தாங்கி அருகே தூக்கிட்டு இறந்த பெண்ணின் சடலத்தை பெற்றோருக்கு காட்டாமல் சடலத்தை எரித்ததாகக்கூறி, பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த நாகுடி அருகே உள்ள களக்குடிதோப்பு பகுதியை சேர்ந்தவர் சேகர் (32). விவசாயி. இவரது மனைவி நந்தினி (26). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று காலை குடும்பத் தகராறு காரணமாக நந்தினி வீட்டில் தூக்கிட்டு தொங்கினார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சடலம் அரசுக்கு சொந்தமான அமரர் ஊர்தியில் களக்குடிதோப்பு மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

இதனிடையே நந்தினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது வீட்டில் சடலத்தை பார்ப்பதற்காக காத்திருந்தனர். ஆனால் சடலம் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால், நந்தினியின் உறவினர்கள் சடலத்தை பார்த்து அஞ்சலி செலுத்த முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இதைத் தொடர்ந்து நந்தினியின் உறவினர்கள் தங்களுக்கு தெரியாமல் நந்தியின் சடலம் எரியூட்டப்பட்டதை கண்டித்தும், நந்தினியின் சாவிற்கு காரணமான அவரது கணவர் சேகரை கைது செய்ய வலியுறுத்தியும் அறந்தாங்கி-கட்டுமாவடி சாலையில் நேற்று இரவு திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் டி.எஸ்.பி ஜெயசீலன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக அறந்தாங்கி-கட்டுமாவடி சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : riot ,Aranthangi ,parents ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு