×

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார கூட்டத்திற்காக அதிமுக நிர்வாகிகள் போல் செயல்பட்ட அரசு அதிகாரிகள்: தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்தரமேரூரில் தேர்தல் பிரசாரம் செய்தார். நேற்று இரவு செங்கல்பட்டு மாவட்டத்தில் சிங்க பெருமாள் கோயிலில் பிரசாரத்தை முடித்தார். பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத தலைவரான  முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பொதுமக்கள் நேரில் வந்து பார்க்க ஆர்வமாக முன்வரவில்லை. மக்கள் மத்தியில் மவுசு இல்லாத தலைவரான இவரது தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அதிமுகவினர் பணம் தந்து கூப்பிட்டால்கூட பொதுமக்கள் வர மறுக்கின்றனர். இதனால் அரசு அதிகாரிகளை வைத்து மிரட்டி முதல்வர் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ஆள்சேர்க்கும் வேலையில் அதிமுகவினர் ஈடுபட்டனர். அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாய்சொல் உத்தரவின்பேரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மகளிர் சுய உதவிக் குழுவினரை அழைத்து முதல்வர் பிரசார கூட்டத்திற்கு அதிக அளவில் பெண்களை அழைத்து செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். அதற்கு பெண்கள் வர மறுத்துள்ளனர். கூட்டத்திற்கு வராவிட்டால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இனி அரசின் எந்த உதவியையும் செய்ய மாட்டோம்; வங்கிகள் தரும் கடன் உதவிகளை தரவிடாமல் செய்து விடுவோம் என்று அரசு அதிகாரிகள் மகளிர் சுய உதவி குழு பெண்களை மிரட்டி உள்ளனர்.அரசு அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து மகளிர் சுய உதவிக்  குழுவினர் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு அதிமுகவினர் கொண்டுவந்த வாகனங்களில் ஏறி  சென்றுள்ளனர். அதேபோல கிராமங்களில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன் பெறும் பெண்களையும் நிர்பந்தப்படுத்தி அரசு அலுவலர்கள் முதல்வர் பிரசாரக் கூட்டத்திற்கு அழைத்துள்ளனர். வர மறுத்த ஏழைப் பெண்களை அரசு அதிகாரிகள் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப் பயனாளிகள் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை நீக்கி விடுவோம் என்று பயமுறுத்தி உள்ளனர். அதிகாரிகள் மிரட்டலுக்கு பயந்துபோன ஏழைப் பெண்கள் அதிமுகவினர் கொண்டு வந்த வாகனங்களில் ஏறிசென்றுள்ளனர்.மக்கள் மத்தியில் துளியும் செல்வாக்கு இல்லாத தலைவரான முதல்வர் எடப்பாடி தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு மக்களை அச்சுறுத்தி ஆள் சேர்க்கும் பணியில் அரசு அதிகாரிகள் அதிமுக நிர்வாகிகள் போல செயல்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக முதல்வர் எடப்பாடி செல்லும் வழியில் உள்ள கிராமங்களில் 100 நாள் வேலை செய்யும் பெண்கள் சாலையோரம் உள்ள புல்களையும், குப்பைகளையும் அகற்றிடும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபடுத்தி உள்ளனர். கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் வரவேற்பு பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி முதல்வர் எடப்பாடி செல்லும் வழியெங்கும் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி ஒரகடம் – வாலாஜாபாத் – காஞ்சிபுரம் – உத்திரமேரூர் – செங்கல்பட்டு – சிங்கப்பெருமாள் கோயில் வரை சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடைவிடாமல் 50 அடிக்கு ஒரு வரவேற்பு பேனர் என 1000 பேனருக்கு மேல்  வைத்துள்ளனர்.  ஆளும் அதிமுகவினர் இந்த அளவுக்கு பேனர்கள் வைத்ததற்காக எந்தவித நடவடிக்கையும் காவல்துறை எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.  காஞ்சிபுரம் – செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுகவினர் மீண்டும் பேனர் கலாச்சாரத்தை உருவாக்கி விட்டனர். இதை மாவட்ட திமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். …

The post முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார கூட்டத்திற்காக அதிமுக நிர்வாகிகள் போல் செயல்பட்ட அரசு அதிகாரிகள்: தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Edabadi Palanisamy ,T.P. Moe Andarasan ,MLA ,Kanchipuram ,Kanchipuram North ,District ,Moe ,Anbarasan ,Kanchipuram district ,Sripurudur ,Walajabad ,Moe Andarasan ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...