×

சிறுவர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்த நிலையில் இந்தி தெரியாவிட்டால்… டெல்லியை விட்டு ஓடிவிடு: ஆப்பிரிக்க பயிற்சியாளரை மிரட்டிய பாஜக கவுன்சிலர்

 

புதுடெல்லி: டெல்லியில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளரை இந்தி கற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தி பாஜக கவுன்சிலர் மிரட்டும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் உள்ள லவ்லி பார்க்கில் கடந்த 12 ஆண்டுகளாக ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிறுவர்களுக்குக் கால்பந்து பயிற்சி அளித்து வருகிறார்.

இவர் வசதியான மற்றும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் பாகுபாடின்றி பயிற்சி வழங்கி வந்த நிலையில், நேற்று முன்தினம் அந்தப் பூங்காவிற்கு வந்த பாட்பர்கஞ்ச் வார்டு பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘இந்தியாவில் இத்தனை ஆண்டுகளாகத் தங்கியிருந்தும் ஏன் இன்னும் இந்தி கற்றுக்கொள்ளவில்லை?’ என்று கேள்வி எழுப்பிய அவர், ‘அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ளாவிட்டால், இந்தப் பூங்காவை விட்டு வெளியேற வேண்டும்’ என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், ‘இங்குப் பணம் சம்பாதிப்பதால் தாய்மொழியான இந்தியைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்; பூங்காவில் நடைபெறும் குற்றச் செயல்களைத் தடுக்க இரவு 8 மணிக்கெல்லாம் பூங்காவை மூட வேண்டும்’ என்றும் அவர் ஆவேசமாகக் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கவுன்சிலர் ரேணு சவுத்ரி தனது செயலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பே நான் அவருக்கு இந்தி டியூஷன் ஏற்பாடு செய்து தருவதாகக் கூறினேன்; ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை, இதனால் மாநகராட்சி அதிகாரிகளால் அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, கவுன்சிலரின் மிரட்டலால் தான் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும், இதே நிலை நீடித்தால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும் என்றும் அந்தப் பயிற்சியாளர் கவலையுடன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், அந்தந்த மொழிகளைக் கட்டாயம் பேசுவதில்லை என்று சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கவுன்சிலரின் இந்தச் செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Tags : Delhi ,BJP ,New Delhi ,Hindi ,Lovely Park ,Mayur Vihar ,
× RELATED பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்...