காவிரி டெல்டாவை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்ககோரி 9 இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம்

நாகை, ஜன. 21: காவிரி டெல்டாவை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி நாகை மாவட்டத்தில் 9 இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 155 பேரை போலீசார் கைது செய்தனர். காலம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டது. எனவே ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு முழு பாதிப்பு என அறிவித்து அறுவடை ஆய்வு செய்வதை கைவிட்டு 100 சதவீதம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கீழ்வேளூர், வாய்மேடு ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டமும், கீழையூர், தலைஞாயிறு, திட்டச்சேரி உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டமும் நடந்தது. அதேபோல் நாகை, வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூர் பகுதியில் தாசில்தார் அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. நாகை மாவட்டத்தில் தடையை மீறி சாலை மறியலில் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய 155 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா தகட்டூர் கடைத்தெருவில் மாவட்ட செயலாளர் சம்பந்தம் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். ஒன்றிய செயலாளர் சிவகுரு. பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் நாராயணன் முன்னிலை வகித்தனர். அப்போது அழுகிய நெற்கதிர்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் சாலையோரமாக நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கீழ்வேளூர்:

கீழையூர் அடுத்த மேலப்பிடாகை கடைத்தெருவில் கிழக்கு கடற்கரைசாலையில் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் மறியல் நடந்தது. இதில் பங்கேற்ற மாவட்டக்குழு உறுப்பினர்கள் கண்ணையன் உள்ளிட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>