×

சம்பா அறுவடை தொடக்கம் போதிய மகசூல் கிடைக்காததால் கீழ்வேளூர் விவசாயிகள் வேதனை

கீழ்வேளூர், ஜன. 21: கீழ்வேளூர் பகுதியில் சம்பா அறுவடை பணி துவங்கியது. போதிய மகசூல் கிடைக்காததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டால் இருபோக சாகுபடியாக குறுகியகால நெல் ரகத்தை குறுவை மற்றும் அறுவடைக்கு பின் தாளடி சாகுபடி செய்யப்படும். ஒரே போகமாக சம்பா சாகுபடியாக மத்தியகால மற்றும் நீண்டகால நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படும். கடந்தாண்டு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் நாகை விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தனர். 65 சதவீத விவசாயிகள் ஒருபோக சம்பா சாகுபடி செய்தனர். இந்நிலையில் கடந்த 15ம் தேதி வரை தொடர்ந்து ஒரு மாதத்துக்கு மேல் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி கதிர்கள் முளைத்தது. இந்நிலையில் கடந்த 6 நாட்களாக மழை விட்டு தண்ணீர் வடிந்தது. இதையடுத்து கீழ்வேளூர் பகுதியில் அறுவடை பணி துவங்கியது.

வயல் காயாமல் சேறாக உள்ளதாலும், நெற்பயிர்கள் சாய்ந்ததாலும் இயந்திரம் கொண்டு அறுவடை செய்யும்போது ஒரு மணி நேரத்தில் அறுவடை செய்ய வேண்டியதை 2 மணி நேரமாகிறது. மேலும் அறுவடை செய்த நெல்லை வீட்டுக்கு கொண்டு சேர்க்கவும் அதிக செலவாகிறது. கனமழை காரணமாக நெற்பயிர்கள் சாய்ந்து முளைத்து எஞ்சிய நெல் கதிரை அறுவடை செய்யும்போது செலவு செய்த தொகைக்கு கூட மகசூல் இல்லாமல் போவதால் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vellore ,start ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...