கரூர், சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில்

கரூர், ஜன. 21: கரூர் திருச்சி மற்றும் சேலம் தேசிய நெடுஞ் சாலைகளில் விபத்து ஏற்படும் பகுதிகளை பல்வேறு துறைகளின் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கரூர் நகரப்பகுதியின் வழியாக சேலம், திருச்சி போன்ற முக்கிய நகரங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் முக்கிய இடங்களில் விபத்துகள் எந்த பகுதியில் நடைபெறுகிறது. அதனை தடுக்க என்னென்ன வழிகள் உள்ளது என்பது குறித்து நேற்று மாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, காவல்துறை, போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சேலம் மதுரை பைபாஸ் சாலைப் பகுதிகளான மண்மங்கலம் பிரிவு, செம்மடை ரவுண்டானா, ராம்நகர் பிரிவு, பெரியாண்டாங்கோயில் பிரிவு மற்றும் திருச்சி பைபாஸ் சாலை பகுதிகளான கோடங்கிப்பட்டி பிரிவு, புலியூர் வளைவுப் பாதை, உப்பிடமங்கலம் பிரிவு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, இந்த பகுதியில் விபத்தினை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். டிஎஸ்பி முகேஸ் ஜெயக்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், ஆய்வாளர் சரவணன், டிராபிக் ஆய்வாளர் மாரிமுத்து, பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர்கள், மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். பைபாஸ் சாலை பிரிவுச் சாலைகளில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட குழுவினரின் அறிக்கை, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>