ஓட்டப்பிடாரம் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

ஓட்டப்பிடாரம், ஜன.21: ஓட்டப்பிடாரம் அருகே ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ள மேலலட்சுமிபுரம் காலனி தெருவைச் சேர்ந்த பச்சைபெருமாள் மனைவி மாரியம்மாள்(40). குறுக்குச்சாலை பஞ்சாயத்து கக்கரம்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் அங்கன்வாடி பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 18ம்தேதி மாரியம்மாள் ஸ்கூட்டியில் குறுக்குச்சாலையில் இருந்து ஓட்டப்பிடாரத்துக்கு தனியாக வந்தார். அப்பகுதியில் உள்ள பள்ளி அருகே வரும்போது,  அவரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர், திடீரென மாரியம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் எடை கொண்ட 2 நகைகளை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார். இதுகுறித்து மாரியம்மாள் ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில் நகை பறித்து சென்றவரின் அடையாளம் தெரிந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், தனிப்படை எஸ்ஐ பொன்முனியசாமி மற்றும் போலீசார் வாலசமுத்திரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நகை பறிப்பில் கேமிராவில் அடையாளம் காணப்பட்டவர் பைக்கில் வந்தார். அவரை சோதனை செய்ததில், பைக்கின் பெட்ரோல் டேங்க் கவரில் 2 நகைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில், அவர் தூத்துக்குடி பூப்பாண்டிபுரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் மூர்த்தி(20) என்பதும் மாரியம்மாளிடம் நகைகளை பறித்ததையும் ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 6 பவுன் நகை மீட்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், பைக்கையும் பறிமுதல் செய்தனர். நகை பறிப்பு வழக்கில் துரிதமாக செயல்பட்டு வாலிபரை கைது செய்த ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசாரை எஸ்.பி. ஜெயகுமார் பாராட்டினார்.

Related Stories:

>