×

வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதி

கடலூர், ஜன. 21: கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர்சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உள்ளரங்கங்களில் நடைபெறும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் 100 சதுர மீட்டருக்கு 20 நபர்கள் என்ற விகிதத்தில் அதிகபட்சம் 200 நபர்களும், திறந்த வெளிப்பகுதிகளில் இடத்தின் பரப்பளவுக்கு ஏற்ப அதிகபட்சம் 50 சதவீதம் வரையிலான நபர்களும் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு  அந்தந்த மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று பங்கேற்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  ஜோதி தரிசனம், அதன் அடிப்படையில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் சத்தியஞானசபையில் வரும் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை 150வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்படுகிறது.
அதனால் விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, அனைத்து இடங்களிலும் சமூக  இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்து, நெகட்டிவ் என சான்று பெற்ற பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மூத்த குடிமக்கள், சுவாச நோய், இருதய நோய், சர்க்கரை நோய், உயர் மற்றும் குறை ரத்த அழுத்தக் குறைபாடு உடையவர்கள், கருவுற்ற தாய்மார்கள் மற்றும் 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள் ஆகியோர் விழாவில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.



Tags : devotees ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி