கடலூர் மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனா பாதிப்பு இல்லை

கடலூர், ஜன. 21: கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலை நேற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் பாதிப்பு இல்லாத மாவட்ட பட்டியலில் இடம் பிடித்தது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 5 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,865 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று பாதிப்பு பட்டியலிடப்பட்ட நிலையில், இதில் கடலூர் மாவட்டத்தில் யாருக்கும் நோய் தொற்று அறிகுறிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் நோய் தொற்று இல்லாத மாவட்டங்களின் பட்டியலில் கடலூர் மாவட்டமும் இடம் பிடித்துள்ளது. நேற்று சிகிச்சை முடிந்து 6 பேர் வீடு திரும்பிய நிலையில், இதுவரையில் 24 ஆயிரத்து 535 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் நோய் தொற்று காரணமாக 27 பேர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் வெளி மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 52 ஆயிரத்து 955 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 439 பேரின் பரிசோதனை முடிவுகள் காத்திருப்பில் உள்ளது.

Related Stories:

>