×

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் மு.க.ஸ்டாலினிடம் பெண்கள் வலியுறுத்தல்

மதுரை, ஜன.21: மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதி, ஆ.கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட செக்கானூரணியில் மதுரை திமுக வடக்கு, தெற்கு மாவட்டங்கள் சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மக்கள் கிராம சபை கூட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் குறைகளை தெரிவித்து பேசினர். ஆ.கொக்குளம் விஜயலட்சுமி பேசும்போது, ‘‘செக்கானூரணியில் வேலை வாய்ப்பிற்கான சூழலை உருவாக்க வேண்டும்’’ என்றார்.

செக்கானூரணி விஜயராணி, ‘‘மகளிர் சுய உதவி குழுக்களை திமுக ஆட்சியில்தான் துவக்கினீர்கள். சரிவர தற்போது இயங்காமல் உள்ளது. குழுக்களுக்கு கூடுதல் நிதி திமுக காலத்தில் ஒதுக்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் இருக்கிறது’’ என்றார்.மாவிலிப்பட்டி சர்மிளா தேவி, ‘‘எங்கள் பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் இருக்கிறது. திருமங்கலம் வாய்க்கால் தூர்வாராமல் இருப்பதால், விவசாயம் பாதித்து வருகிறது. சரி செய்ய வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நூறு நாள் வேலையை, 200 நாட்களுக்கு மாற்ற வேண்டும்’’ என்றார்.

காண்டை தவமணி, ‘‘திருமங்கலத்தில் ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் இல்லை. பொதுமக்கள் பாதிக்கின்றனர். ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய பகுதியில் மேம்பாலம் இல்லாததால், தினமும் 70 முறை கேட் அடைத்து திறப்பதால், அனைவரும் பாதிக்கிறோம். மத்திய, மாநில அரசுகளுக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் பலனில்லை. திருமங்கலத்தில் பாதாளச்சாக்கடை திட்டம் இல்லை’’ என்றார்.

செக்கானூரணி ஜெயபாரதி, ‘‘செக்கானூரணியில் ஆரம்ப சுகாதார மருத்துவமனை உள்ளது. ஸ்கேன் எடுப்பது, விபத்து கவனிப்பு, டாக்டர்கள் போன்ற வசதிகள் இல்லை. மதுரை அரசு மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. செக்கானூரணி மருத்துவமனையை தரம் உயர்த்தி கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும்’’ என்றார். மக்களின் குறைகளை கேட்ட மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து குறைகளும் தீர்த்து வைக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags : Women ,MK Stalin ,self-help groups ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...