×

அரசு செவிலியர் வீட்டில் 40 பவுன் நகை துணிகர திருட்டு

புதுச்சேரி,  ஜன. 21: புதுச்சேரியில் அரசு செவிலியர் வீட்டில் 40 பவுன் நகைகளை திருடிய  அவரது மகனின் நண்பரை பிடித்து உருளையன்பேட்டை போலீசார் அதிரடியாக  விசாரித்து வருகின்றனர்.  புதுச்சேரி, வெண்ணிலா நகர், மாரியம்மன் கோயில்  வீதியைச் சேர்ந்தவர் நிவர்ஷி ஜான்சன் (56). அரசு மருத்துவமனை செவிலியரான  இவரது கணவர் ஜான்சன் இறந்து விட்ட நிலையில் மகனுடன் வசித்து வருகிறார்.  கொரோனா ஊரடங்கு காலங்களில் இவரது மகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த  நிலையில், அவரது தாய் மட்டும் வேலைக்கு சென்றார். கொரோனா காலம் என்பதால்  அங்கேயே சில நாட்கள் நிவர்ஷி தங்கி பணியாற்றியதாக தெரிகிறது. இந்த  காலத்தில் தனது நண்பரான கோவிந்த சாலையைச் சேர்ந்த மைக்கேல் சுதனை (24)  அடிக்கடி நிவர்ஷியின் மகன் வீட்டிற்கு அழைத்து வந்தாராம். சில  மாதங்களுக்குமுன்பு இருவரும் அடிக்கடி அங்கு சந்தித்துக் கொண்டதாக  கூறப்படுகிறது.  இதனிடையே நிவர்ஷி ஜான்சன், நீண்ட நாட்களுக்குபின் தனது  பீரோவில் இருந்த நகைகளை நேற்று முன்தினம் சரிபார்த்துள்ளார். அப்போது அங்கு  வைத்திருந்த 5 நெக்லஸ், 4 செயின், ஆரம், கம்மல் உள்ளிட்ட 35 எண்ணிக்கையில்  சுமார் 40 பவுன் நகைகள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.   இதுகுறித்து தனது மகனிடம் நிவர்ஷி ஜான்சன் கேட்டறிந்த நிலையில்,  அவரது நண்பர் மைக்கேல் சுதனை தவிர கடந்த சில மாதங்களில் வேறு யாரும்  வீட்டிற்குள் வந்து செல்லவில்லை என்பதை உறுதியான நிலையில், இதுபற்றி  உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் நிவர்ஷி ஜான்சன் புகார் அளித்தார்.

 கிழக்கு  எஸ்பி ரக்சனாசிங் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சஜித் தலைமையிலான  போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரூ.16 லட்சம் மதிப்பிலான  நகைகள் திருட்டு சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.  கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கதவு, பீரோ  எதுவும் உடைக்கப்படாமல் நகைகள் திருட்டுபோய் இருப்பதால் அவரது வீட்டிற்கு  வந்த நபரில் யாரோ ஒருவர் தான் நகைகளை எடுத்திருக்க வேண்டும் என்று கருதிய  போலீசார், விபரங்களை கேட்டறிந்தனர். பின்னர் சந்தேகத்தின்பேரில்  மைக்கேல் சுதனை தனிப்படை பிடித்து அதிரடியாக விசாரணை மேற்கொண்டது. இதில்  அவர் தனது நண்பர் வீட்டிலிருந்து நகைகளை திருடியதை ஒப்புக் கொண்ட நிலையில்  மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. இதையடுத்து அவரிடமுள்ள  திருட்டு  நகைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக  ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு அவர் கோவிட் பரிசோதனை முடிக்கப்பட்டு  காலாப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.

Tags : home ,
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...