நாகர்கோவில் நாகராஜா கோயில் தை திருவிழா தொடங்கியது

நாகர்கோவில், ஜன.21 :  நாகர்கோவில் நாகராஜா கோயில் தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 10 நாட்கள்  விமரிசையாக திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான தை திருவிழா நேற்று (20ம்தேதி) தொடங்கியது. காலை 6.30க்கு ெகாடியேற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில் அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், காரியம் ஆறுமுகதரன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அழகேசன், ஜெயச்சந்திரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் மீனாதேவ் மற்றும் அனந்த கிருஷ்ணன் பக்த சேவா அறக்கட்டளை நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். 29ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. தினமும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது. 9ம் திருவிழாவான 28ம் தேதி, காலை 7.30க்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கலெக்டர் அரவிந்த், எஸ்.பி. பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். அன்று இரவு 8 மணிக்கு சப்தாவர்ணம் நடக்கிறது. 29ம் தேதி 10ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று இரவு 9.30க்கு, ஆறாட்டுதுறையில் இருந்து சுவாமி திருக்கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி 10 நாட்களும் சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

Related Stories:

>