வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருப்பூர், ஜன.21: திருப்பூர், குமரானந்தபுரம் பகுதியில் கரும்பு சாப்பிட்டதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர். திருப்பூர் குமரானந்தபுரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (33). பனியன் நிறுவன தொழிலாளி. இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரவு நண்பர்களான ஜீவா, ரஞ்சித்குமார் ஆகியோருடன் அப்பகுதியில் ரோட்டோரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது அதே பகுதியை சேர்ந்த மின் வாரிய ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் ஆனந்த், கார்த்தி, கண்ணன் ஆகியோர் ரோட்டோரத்தில் கரும்பு கட்டிலிருந்த கரும்பை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த ஜீவா இது குறித்து கேட்டபோது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இதில் ஆனந்த், கார்த்தி, கண்ணன் தரப்பினர் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஜீவா, ரவிக்குமார் ஆகியோரை குத்தினர். இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதில் கோவை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமார் கடந்த 19ம் தேதி சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து அடிதடி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த வடக்கு போலீசார் கண்ணன் என்பவரை 19ம் தேதி கைது செய்தனர். அந்த வழக்கில் தொடர்புடைய கார்த்திக் (40) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் சமந்தப்பட்ட ஆனந்த், ஜீவா ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பின்னர் உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்

Related Stories:

>