மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு

ஊட்டி, ஜன.21:  உள்ளாட்சி பிரதிநிதிகள் சுயமாக செயல்படவிடாமல் தடுக்கிற மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக திமுக., மாவட்ட செயலாளர் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.  மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட இப்பட்டியல்களை சரி பார்ப்பதற்காக நகரம், ஒன்றியம், பேரூர் வாரியாக பிரித்து நிர்வாகிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட திமுக., செயலாளர் முபாரக் தலைமை வகித்து அவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து மாவட்ட செயலாளர் முபாரக் நிருபர்களிடம் கூறுகையில், திமுக., சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் 260 இடங்களில் மக்கள் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை திமுக., நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 1 கோடி பேர் அதிமுக.,வை நிராகரிக்கிறோம் என இணையதளம் மூலமாகவும், போன் மூலம் தெரிவித்துள்ளனர். மக்களின் ஆதரவுடன் திமுக., ஆட்சி அமைக்கும்.  இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவை கட்சி நிர்வாகிகளிடம் சரி பார்ப்பிற்காக பிரித்து வழங்கப்பட்டுள்ளது.   தேர்தலில் எந்த தில்லுமுல்லு நடந்தாலும் திமுக., வெற்றி பெறுவது நிச்சயம். கடந்த 17ம் தேதி திமுக., உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. அவர்களிடம் விசாரித்ததில் உள்ளாட்சி அமைப்புகளில் பல கோடி ரூபாய் ஊழல் நீலகிரி மாவட்டத்தில் நடந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். முறையாக டெண்டர் விடாமல் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவிக்கும் நபர்களுக்கு, ஒப்பந்த பணிகள் வழங்கப்படுகிறது.  மாவட்ட ஊராட்சி தலைவர் ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு தெரியாமலே டெண்டர் விடப்பட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் நடந்துள்ள மோசடிகள் நடப்பது தொடர்பான ஆவணங்கள் வைத்துள்ளோம். உள்ளாட்சி பிரதிநிதிகள் சுயமாக செயல்படவிடாமல் தடுக்கிற மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். வரும் 23ம் தேதி நடைபெறும் திமுக., மாவட்ட செயற்குழு கூட்டத்தில் போராட்டம் நடத்தப்படும் தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும், என்றார்.

Related Stories:

>