×

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு கோவையில் 30,62,744 வாக்காளர்கள்

கோவை, ஜன. 21: கோவையில் நேற்று கலெக்டர் ராஜாமணி வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளிலும் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலைெயாட்டி வரைவு வாக்காளர் பட்டியல் கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் ஆகிய திருத்தப் பணிகளுக்காக 4 நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. மேலும் ஆன்லைன் மூலமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் 15ம் தேதியை அடிப்படையாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கோவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்பார்வையாளர் கருணாகரன் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் கலெக்டர் ராஜாமணி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் 15 லட்சத்து 9 ஆயிரத்து 531 ஆண்கள், 15 லட்சத்து 52 ஆயிரத்து 799 பெண்கள், 414 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 18 முதல் 19 வயதிற்குள்ள முதல் வாக்காளர்கள் 37 ஆயிரத்து 667 பேர் இடம்பெற்றுள்ளனர். 10 தொகுதிகளில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையத்தில் 4 லட்சத்து 61 ஆயிரம் வாக்காளர்கள், குறைந்தபட்சமாக வால்பாறையில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 335 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மாவட்ட கலெக்டர் ராஜாமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:  கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 29 லட்சத்து 70 ஆயிரத்து 733 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்பட திருத்தப் பணிகளுக்காக நடைபெற்ற சிறப்பு முகாம்களிலும், ஆன்லைனிலும் பெயர் சேர்த்தலுக்கு மட்டும் 1 லட்சத்து 27 ஆயிரத்து 562 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்காக 35 ஆயிரத்து 551 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன் அடிப்பபடையில் தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 10 தொகுதிகளிலும் சேர்த்து 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 பேர் இடம் பெற்றுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலில் வரைவு வாக்காளர் பட்டியலை விட 92 ஆயிரத்து 11 பேர் கூடுதலாக இடம் பெற்றுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலில் 15 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்ய வேண்டியுள்ளது. அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் தற்போது 979 வாக்குச்சாவடி மையங்களில் 3,048 வாக்குச் சாவடிகள் உள்ளன. கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் தற்போது 1,477 வாக்குச்சாவடிகளில் 1000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு கூடுதலாக 1,600 வாக்குச் சாவடிகள் வரை அமைக்க வாய்ப்புள்ளது.  தொடர்ந்து சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவித்து வேட்புமனு தாக்கல் வரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கு விண்ணப்பிக்கலாம். வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் விண்ணப்பம் அளிக்கலாம். இவர்களுக்கான துணை வாக்காளர் பட்டியல் தேர்தலுக்கு முன் வெளியிடப்படும். கோவை மாவட்டத்திலுள்ள 30.62 லட்சம் வாக்காளர்களில் பெரும்பாலானவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 5.5 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டை வழங்க வேண்டியுள்ளது.

அனைவருக்கும் தேர்தலுக்கு முன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்களது திறன்குறைபாடு குறித்த விவரங்களை வாக்காளர் அடையாள அட்டை எண் கொண்டு அருகிலுள்ள கிரமா நிர்வாக அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் 1950 கட்டணமில்லா வாக்காளர் சேவை மையம் மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். சட்டசபை தேர்தலின் போது மாற்றத்திறனாளி வாக்காளர்களுக்கு தேவைப்படும் வசதிகளை செய்துகொடுக்க இந்த விவரங்கள் பயன்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், கோட்டாட்சியர் சுரேஷ், கலெக்டரின்  நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம், நேர்முக உதவியாளர் (தேர்தல்) சிவகுமார்  மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Coimbatore ,voters ,
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு