டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக குடியரசு தினத்தில் ஈரோட்டில் விவசாயிகள் வாகன பேரணி

ஈரோடு: டெல்லியில்  போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று  விவசாயிகள் வாகன பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.   ஈரோடு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்  நேற்று இரவு நடந்தது. இக்கூட்டத்திற்கு தி.மு.க. விவசாயிகள் அணி மாநில துணைச்  செயலாளர் கள்ளிப்பட்டி மணி தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய போராட்ட  ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் முனுசாமி, துளசிமணி, சுப்பு,  சி.ஐ.டி.யு. ஈரோடு மாவட்ட தலைவர் சுப்பு, பெரியாரிய உணர்வாளர்கள்  கூட்டமைப்பு குறிஞ்சி, ரத்தினசாமி, நிலவன், மா.கம்யூனிஸ்ட்  மாவட்ட செயலாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்  டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும்,  மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும் அகில  இந்திய அளவில் குடியரசு தினத்தன்று நடைபெறும் விவசாயிகள் பேரணியை ஈரோடு  மாவட்டத்தில் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.    ஈரோடு  மாவட்டத்தில் சத்தியமங்கலம், கோபி, அந்தியூர், பவானி, சென்னிமலை,  பெருந்துறை, கொடுமுடி, சிவகிரி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  கலெக்டர் அலுவலகம் நோக்கி தேசிய கொடிகளுடன் வாகனப் பேரணி மற்றும்  உறுதிமொழியேற்பு முழக்க போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>