×

10 மாதங்களுக்குப் பிறகு மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு

திருப்பூர், ஜன.20: திருப்பூர் மாவட்டத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். ஒரு வகுப்பிற்கு 25 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பதே கேள்விக்குறியானது. இதையடுத்து 2020-21-ம் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்-லைன் வழியாகவும், கல்வி தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் மூலமாகவும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்தன.  இந்நிலையில் தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. திருப்பூரில் 50 சதவீத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு ஆர்வமுடன் வந்தனர். மாணவ-மாணவிகளை பள்ளி நுழைவு வாயிலில் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி நுழைவு வாயிலில் மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி அளிக்கப்பட்டது. கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின் மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தோழிகள், ஆசிரியர்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று மாணவிகள் தெரிவித்தனர்.

இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்து நீண்ட காலமானதால் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். ஒரு வகுப்பிற்கு 25 மாணவ மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.  தாராபுரம்: தாராபுரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டு இயங்கின. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் முக கவசம் அணிந்து பள்ளி வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நுழைவுவாயிலில் கிருமிநாசினி வினியோகித்து சமூக இடைவெளியுடன் பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வகுப்பறைகளில் 4 பேர் அமரக்கூடிய இருக்கையில் முதல் வரிசையில் 2 மாணவர்களும் பின்வரிசையில் ஒரு மாணவியும் என சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. முதல் இரண்டு நாட்கள் மாணவிகள் இயல்பு நிலைக்கு திரும்ப மன அமைதிக்கான யோகா மற்றும் பிரார்த்தனை நீதிபோதனை வழிபாடுகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 இரண்டு நாட்களுக்குப் பின் வழக்கம்போல பள்ளியின் பாட வகுப்புகள் நடைபெறும் என பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
உடுமலை: உடுமலையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த அனைத்து மாணவர்களுக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. வரிசையில் நிற்க வைத்து சானிடைசர் பயன்படுத்திய பிறகே வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக பெற்றோரிடம் ஒப்புதல் பெற்ற கடிதங்களை மாணவ, மாணவிகள் கொண்டு வந்திருந்தனர். பெரும்பாலான மாணவ, மாணவிகள் வந்திருந்ததாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Schools ,district ,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...