×

திருப்பூர் தெற்கு போலீசாரின் மனித உரிமை மீறலை கண்டித்து பல்வேறு கட்சியினர் கமிஷனரிடம் மனு

திருப்பூர், ஜன. 20: திருப்பூர், பல்வேறு அரசியல் கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் கோர்ட் வீதி பகுதியில் உள்ள திமுக மத்திய மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.  திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ் சார்பில் ஈஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி ரவிச்சந்திரன், மதிமுக நிர்வாகி சிவபாலன், கொமதேக நிர்வாகி வெங்கடாசலம், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் தமிழ்வேந்தன், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி முஸ்தபா, மனித நேய கட்சி செயலாளர் பாபு ஜி, எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகி பாபு, தமுமுக நிர்வாகி அப்பாஸ், இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகி கலீல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளின் பொய் வழக்கு மற்றும் மனித உரிமை மீறலை கைவிடக்கோரி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிப்பது என தீர்மானம் செய்தனர்.  அதன்படி கூட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருப்பூரிலும் போலீசாரின் அனுமதி பெற்று அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு, திருப்பூர் ஷாகின்பாத் கூட்டமைப்பு, சிறுபான்மை மக்கள், ஜனநாயக இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்த போராட்டங்களில் பொதுமக்களுக்கு அரசுக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி நடைபெற்று வந்தது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலில் படி போராட்டம் கைவிடப்பட்டது. மேற்படி போராட்டத்தை ஒட்டி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நிஷாபானு மீதான குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்ததுடன் உரிமைக்காக போராடும்போது வழக்கு எதற்கு என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில்  போராட்டத்தில் பங்கேற்ற அமைப்பினர் மீது திருப்பூர் தெற்கு போலீசார் காலதாமதாக பழிவாங்கும் நோக்குடன் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேற்படி வழக்குகளில் சம்மந்தப்படாத நபர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள நபர்களை உண்மைக்கு புறம்பாக தலைமறைவு எதிரிகள் என்று குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருப்பூர் மாநகரப் பகுதிகளில் உள்ள சிறுபான்மை மக்கள் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் சென்று அச்சுறுத்தி வருகின்றனர். மேலும் மனித உரிமை மீறல் செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

Tags : parties ,commissioner ,Tirupur South ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...