×

மாற்றுப்பாதையான ஊட்டி - தலைகுந்தா சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

ஊட்டி, ஜன. 20: பாரஸ்ட் கேட் வழியாக தலைகுந்தா செல்லும் சாலையில் பல இடங்களில் சாலை பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டியில் இருந்து தலைகுந்தாவிற்கு செல்லும் மாற்றுப்பாதை உள்ளது. இச்சாலையில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் சந்திப்பில் இருந்து பாரஸ்ட்கேட், காந்திநகர் வழியாக தலைகுந்தாவை சென்றடையும். கோடை காலத்தில் ஊட்டி - கூடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இச்சமயங்களில் இச்சாலை நகரை இணைக்கும் மாற்றுப்பாதையாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், அணிக்கொரை, தேனாடுகம்பை, காந்திநகர், கோழிபண்ணை, தாவணே, கவரட்டி, உல்லித்தி போன்ற கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது.

இந்நிலையில், இச்சாலையில் பல இடங்களில் பழுதடைந்து பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்ப்ட்டுள்ளது. மேலும், சாலையோரங்களில் அதிகளவு மரங்கள் உள்ளதால், சாலையில் நிழல் விழுந்து பள்ளங்கள் இருப்பது தெரிவதில்லை. இதனால், இச்சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஒட்டுநர்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோடை சீசன் நெருங்கிய நிலையில், இச்சாலையை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் அதிகளவு பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, ஊட்டியில் இருந்து பாரஸ்ட் கேட் வழியாக தலைகுந்தா வரை செல்லும் மாற்றுப்பாதையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Ooty ,Talakunda Road ,
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்