×

புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்: பணியை முடிக்க மக்கள் வலியுறுத்தல்

திருவாடானை, டிச.20: திருவாடானை அருகே பாண்டுகுடி பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது .இந்த அங்கன்வாடி மையத்தில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் சத்துணவுடன் கூடிய முன் பருவக்கல்வி பயின்று வந்துள்ளனர். இந்நிலையில் இங்கு செயல்பட்டு வந்த பழைய அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதனை இடித்து அகற்றி அப்புறப்படுத்தி விட்டனர். அதன்பிறகு இந்த அங்கன்வாடி மையம் அதே பகுதியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான ஓட்டு கொட்டகையில் செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு கட்டுமானப் பணி நடைபெற்று வந்த நிலையில், திடீரென பாதியிலேயே அந்த கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டு கடந்த ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக ஓட்டு கொட்டகையில் செயல்பட்டு வரும் இந்த அங்கன்வாடி மையத்தில், போதிய இடவசதியின்றி நெருக்கடியான சூழல் நிலவுவதாலும், எவ்வித பாதுகாப்புமின்றியும், போதுமான காற்றோட்ட வசதி இல்லை.

இதனால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சப்பட்டு வருவதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் தற்சமயம் இந்த அங்கன்வாடி மையத்திற்கு சுமார் 15க்கும் குறைவான எண்ணிக்கையில் குழந்தைகள் வருவதாகவும், அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால் கட்டுமானப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு கடந்த ஓராண்டாக கிடப்பில் போடப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்: இந்த அங்கன்வாடி மைய பழைய கட்டிடம் இருந்த போது 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் சத்துணவுடன் கூடிய முன்பருவக் கல்வி படித்து வந்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பழைய அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்ததால் அதனை இடித்து அப்புறப்படுத்தி விட்டனர்.
அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே இடத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் அந்தப் பணி எவ்வித காரணமும் இன்றி பாதியிலேயே நிறுத்தப்பட்டு கடந்த ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டது. இதனால் தற்காலிகமாக தனியாருக்கு சொந்தமான ஒட்டுக் கொட்டகையில் இந்த அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. ஆகையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்ட கட்டிடப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமெனக் கூறினர்.

Tags : New Anganwadi Center ,Building ,Thiruvadana ,Anganwadi center ,Pandugudi ,
× RELATED ஓய்வூதியர் தின விழா