×

குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி; சீரமைப்பு பணி அவசியம் : சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

மதுரை, டிச. 20: குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி சீரமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், பணிகளை விரைந்து தொடங்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டியில், சிறுமலையிலிருந்து உருவாகி வரும் தாடகை நாச்சி அருவி உள்ளது. ஆண்டில் 9 மாதங்களுக்கு இந்நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும். மாவட்டத்தின் ஒரே அருவியாகவும், முக்கிய சுற்றுலாத்தலமாகவும் உள்ள இந்நீர்வீழ்ச்சி, 2018 கஜா புயலில் சேதமடைந்தது. அப்போது பாறைகள் உருண்டு விழுந்ததில் நடைபாதைகள், குளியல் பகுதிகள், கைப்பிடிகள், கழிப்பறைகள் மற்றும் உடைமாற்றும் அறைகள் போன்றவை அனைத்தும் சேதமடைந்தன.

இதற்கிடையே 2024-25ம் நிதியாண்டில் தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களை சீரமைக்க ரூ.10.20 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், குட்லாடம்பட்டி அருவிக்கு என, ரூ.2.93 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்த, 7ம் தேதி மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து சீரமைப்பு பணிகளை விரைந்து துவக்க வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘சீரமைப்பு பணி திட்ட அறிக்கையில் கூடுதலாக சிலவற்றை சேர்த்து, அரசிடம் சமர்ப்பிக்கும் பணி நடக்கிறது. அதேநேரம், சுற்றுலாத்துறையிடமிருந்து திட்ட நிதியை எங்கள் துறைக்கு அனுப்க கோரப்பட்டு உள்ளது. எனவே அடுத்த மாதம் முதல் வாரம் சீரமைப்பு பணிகள் தொடங்கும்’ என்றனர்.

Tags : Kutladampatti Waterfall ,Madurai ,Kutladampatti ,Waterfall ,Forest Department ,Vadippati ,Thadakai ,Nachi Waterfall ,Sirumalai ,
× RELATED ஓய்வூதியர் தின விழா