×

கட்டிடங்கள் சிதிலமடைந்த நிலையில் அம்பேத்கர் காலனியில் அச்சுறுத்தும் ரேஷன் கடை பணியாளர்கள், பொதுமக்கள் அச்சம்

வருசநாடு, ஜன. 20: வருசநாடு அருகே, கட்டிடங்கள் சேதமடைந்து ரேஷன் கடை இடிந்து விழும் நிலையில் இருப்பதால், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களும், பணியாளர்களும் அச்சத்தில் உள்ளனர். வருசநாடு ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் காலனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இங்குள்ள ரேஷன் கடை மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு சீனி, அரிசி, பாமாயில், கோதுமை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், ரேஷன் கடை கட்டிடங்கள் ஆங்காங்கே விரிசல் விழுந்தும் சிலாப்கள் சேதமடைந்தும், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் பணியாளர்கள் உள்ளனர். பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். இக்கட்டிடத்தை இடித்துவிட்டு ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என ரேஷன் கடை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர் ஆசிரியர் வேல்முருகன் கூறுகையில், ‘அம்பேத்கர் காலனியில் உள்ள ரேஷன் கடை கட்டிடங்கள், சிலாப்கள், கைபிடிகள் சிதிலமடைந்துள்ளன. மழை காலங்களில் மேற்கூரை வழியாக தண்ணீர் கசிந்து ரேஷன் பொருட்கள் நனையும் அவலம் உள்ளது. எனவே, கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கடை கட்டித்தர வேண்டும்’ என்றார்.

Tags : Ration shop workers ,buildings ,
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...