×

ரேசன் பொருட்களில் எடை குறைவு பொதுமக்கள் மறியல் போராட்டம்

காரைக்குடி, ஜன.20:  ரேசன் கடையில் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் குறைத்து வழங்குவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டடது. காரைக்குடி ஆலங்குடியார் வீதியில் உள்ள ரேசன் கடையில் அப்பகுதியை சுற்றியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரேசன் பொருட்கள் வாங்குகின்றனர். இக்கடையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சர்வர் வேலை செய்ய வில்லை என கூறி பொருட்கள் வழங்காமல் இழுத்தடித்துள்ளனர். வழங்கும் ரேசன் பொருட்களிலும் எடையை குறைத்து வழங்குவதாக கூறி அப்பகுதி மக்கள் திடீர் என கடை முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் கலைந்து சென்றனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், ஒன்று முதல் 10ம் தேதிக்குள் வந்தால் மட்டுமே கடையில் பொருள் வாங்க முடியும். 10ம் தேதிக்கு பின்வந்தால் பொருள் இல்லை என கூறி வழங்க மறுக்கின்றனர். தவிர கோதுமை, பச்சரிசி போன்ற பொருட்கள் வழங்குவதே கிடையாது. பொருட்கள் அரை கிலோ வரை குறைவாக விநியோகம் செய்கின்றனர். அரிசியும் அரசு தெரிவித்த அளவில் வழங்குவது கிடையாது. பொருட்களை கடத்துகின்றனர். வேலைக்கு செல்லாமல் பொருள் வாங்க வரும் போது எல்லாமல் சர்வர் வேலை செய்ய வில்லை என கூறுகின்றனர். இதுகுறித்து கேட்டால் இஷ்டம் இருந்தால் வாங்குங்கள் என மரியாதை இல்லாமல் பேசுகின்றனர். இங்குள்ள பெண் பணியாளரை மாற்ற வேண்டும், ஒவ்வொரு மாதமும் முறையாக பொருட்கள் வழங்க வேண்டும் என்றனர்.


Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ