×

நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல் விழா கோலாகலம்

சிவகங்கை, ஜன.20:  நாட்டரசன்கோட்டையில் ஆயிரக்கணக்கானோர் பொங்கலிடும் செவ்வாய் பொங்கல் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய்கிழமை நகரத்தார்களால் செவ்வாய் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம். நகரத்தார் சமூகத்தை சேர்ந்த ஆண்களுக்கு திருமண முடிந்தவுடன் அவர்கள் “ஒரு புள்ளியென” கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு புள்ளிகள் எண்ணிக்கையில் அதிகமானோர் பொங்கலிடும் நிகழ்ச்சி நாட்டரசன்கோட்டையில் மட்டுமே நடப்பதால் இந்த விழா அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்த ஆண்டும் இவ்விழா நேற்று மாலை தொடங்கியது. முதல் பொங்கல் பானை வைக்க தேர்வு செய்யப்பட்ட குடும்பத்தினர் சிறப்பு செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் பொங்கல் வைக்க தொடங்கியவுடன் தொடர்ந்து மற்றவர்களும் பொங்கல் வைத்தனர். முதல் பொங்கல் பானை மட்டும் மண் பானையிலும் மற்றவர்கள் வெண்கல பானைகளிலும் பொங்கல் வைத்தனர். நகரத்தார் சார்பில் 917 பேர் பொங்கலிட்டனர். இவர்கள் தவிர நேர்த்திக்கடன் வைத்துள்ள நூற்றுக்கணக்கானவர்களும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்தனர். இரவு அம்மன் சுற்றிவரும் போது ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

இவ்வாறு கோவில் முன் அமைந்துள்ள இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு பெண்கள் வரிசையாக பொங்கலிடும் நிகழ்ச்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.
நகரத்தார் கூறியதாவது, ‘வேண்டுதல் அடிப்படையில் பல நூற்றாண்டுகளாக தொடர்ச்சியாக இந்த விழா நடைபெற்று வருகிறது. தற்போது ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி விழா நடத்துவது என்பது குறைந்துவிட்டது. ஆனால் இவ்வூரில் செவ்வாய் பொங்கல் வைப்பவர்களின் எண்ணிக்கை குறையாமல் தற்போது வரை தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.  இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் வெளிநாட்டில் வசிப்பவர்கள் வருவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால் ஏராளமானோர் வர முடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் சொந்த ஊரில் ஓரிடத்தில் அனைவரும் சந்திப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியானது ஆகும். இதில் மாப்பிள்ளை மற்றும் பெண் பார்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது என்றனர்.
செவ்வாய் பொங்கலுக்கு வெளி மாவட்டங்கள், வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருவர். ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வெளி நாட்டு சுற்றுலாப்பயணிகள் அழைத்து வரப்படுவதும் வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அழைத்துவரப்படவில்லை.

Tags : festival ,Pongal ,Nattarasankottai ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா