×

ஆளும் கட்சியினர் குளறுபடியால் 2 ஆண்டாக நிரப்பப்படாத அங்கன்வாடி காலிப்பணியிடம்

சிவகங்கை, ஜன.20:  சிவகங்கை மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி அமைப்பாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் இருந்த நிலையில் 71 முதன்மை அங்கன்வாடி மைய பணியாளர், 45 குறு அங்கன்வாடி மைய பணியாளர், 108 அங்கன்வாடி மைய உதவியாளர் பணியிடங்களுக்கு மட்டும் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் விண்ணப்ப அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை தேர்வு செய்யப்பட்டவர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை. சத்துணவு, அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களிடம் ஆளும் கட்சி சார்பில் பணியிடத்திற்கு இவ்வளவு என குறிப்பிட தொகை நிர்ணயித்து வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒரே பணியிடத்திற்கு பலரிடம் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆளும் கட்சியினரிடம் பணம் கொடுத்தவர்களில் தகுதியுள்ள குறைவான ஆட்களே நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மற்ற பணியிடங்களுக்கு உண்மையான தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனால் தேர்வு செய்யப்பட்ட இறுதிப்பட்டியல் படி பணி நியமனம் செய்யவிடாமல் ஆளும் கட்சியினர் தடுத்து வருகின்றனர். இது குறித்து அலுவலர்கள் சிலர் கூறியதாவது:மொத்த பணியிடங்களில் 40 சதவீதம் முதல் 50 சதவீத பணியிடங்களுக்கு ஆளும் கட்சியினர் கொடுக்கும் பட்டியலில் உள்ளவர்களை தேர்வு செய்ய வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் அதில் 10 சதவீத நபர்கள் மட்டுமே உண்மையான தகுதியுடையவர்கள். தகுதி இல்லாத மற்றவர்களுக்கு பணி வழங்கினால் உண்மையான தகுதியுடைவர்கள் நீதிமன்றம் செல்வர். இதனால் மீண்டும் குழப்பம் ஏற்படும். ஆனால் ஆளும் கட்சியினர் இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் தாங்கள் தரும் பட்டியலில் உள்ளவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கொக்கி மாட்டி மின்சாரம் திருட்டு:...