×

சிங்கம்புணரி பகுதியில் முளைவிடும் நெல்மணிகள் கலங்கும் விவசாயிகள்

சிங்கம்புணரி, ஜன.20: நெல் அறுவடை செய்யாமல் உள்ளதால், நெல்மணிகள் முளைத்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சிங்கம்புணரி பகுதியில் கடந்த ஆண்டு ஆடி பட்டத்தில் இருந்து விவசாய பணிகளை விவசாயிகள் ஆர்வத்துடன் தொடங்கினர். மழை தாமதம் காரணமாக விவசாய பணிகள் சற்று தாமதமாகவே தொடங்கப்பட்டது. சிங்கம்புணரி, சூரக்குடி, பிரான்மலை, காளாப்பூர், வேங்கைபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெல் விவசாயம் செய்யப்பட்டது. இந்நிலையில் மார்கழி மாத இறுதியில் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் மழை பெய்ததால் சிங்கம்புணரி பகுதியில் விவசாயம் செய்த விவசாயிகள் நெல் அறுவடை பணிகளை செய்ய முடியாமல் பெரும் அவதி அடைந்தனர்.

வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகி வீணாகியது. மேலும் கதிர் முற்றிய நெற்பயிர்கள் மழை ஈரத்தில் மீண்டும் முளைக்கத் தொடங்கியது. இதனால் சுமார் 500 ஏக்கர் நெல் பயிர்கள் சேதமடைந்தது. விவசாயிகள் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் செலவு செய்த தொகையை பெற முடியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர். நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் நெல்லும் வைக்கோலும் வீணாகி மாடுகளுக்கு தீவன பற்றாக்குறையால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : paddy fields ,Singampunari ,area ,
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை